மதுரை: அதிமுகவை கைப்பற்றும் நோக்கில் மதுரையில் நேற்று முதல் முகாமிட்டுள்ள சசிகலா, நாளை பசும்பொன் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன் னிட்டு, இன்று மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள மருது சகோதரர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.  சசிகலாவை வரவேற்று அவரது ஆதரவாளர்கள் புரட்சித்தாய் என கோஷம் எழுப்பினர்.

ஆண்டுதோறும் பசும்பொன்  முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா, அக்டோபர் 28, 29, 30 ஆகிய நாள்களில் நடைபெற்று வருகிறது. இதில், தேவர் குருபூஜை அரசு விழாவாக நடத்தப்பட்டு வருகிறத. இந்த ஆண்டு  முத்துராமலிங்க தேவரின் 104வது ஜெயந்தி விழாவும், 59வது குருபூஜை விழாவும் கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி நாடு முழுவதும் உள்ள அவரது சமுதாயத்தினர் மட்டுமின்றி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பசும்பொன்னிற்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக, இந்த ஆண்டு மாநிலஅரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையிலும், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று (28ந்தேதி) முதல் தென்மாவட்டங்களில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. ஆங்காங்கே உள்ள தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்தல், முளைப்பாடி எடுத்தல், அபிசேகம் செய்தல், தீபாராதனை காட்டுதல் என பரபரப்பான நிகழ்சிகள் நடைபெற்று வருகின்றனர். நாளை 30ந்தேதி பெரும்பாலோர் பசும்பொன்னிற்கு சென்று தேவர் சிலையை தரிசித்து வருவார்கள். இதனால் காரணமாக மதுரை, பசும்பொன் உள்பட தென்மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சசிகலா மதுரை கோரிபாளையத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வந்தார். அவரை  நூற்றுக்கணக்கானோர் அவரை வரவேற்று புரட்சித்தாய் சின்னம்மா என கோஷம் எழுப்பி  ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து, அங்கிருந்த பசும்பொன் தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கு, மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து தனது ஆதரவாளர்கள் புடைசூழ காரில் தெப்பக்குளம் சென்ற சசிகலா, அங்கு  சுதந்திரப் போராட்ட வீரர்களான, மாமன்னர்கள் மருது சகோதரர்களின் திருவுருவ சிலைகளுக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.

அங்கும் அவரது ஆதரவாளர்கள், அதிமுகவினர், அமமுகவினர் பொதுமக்கள் திரண்டு நின்று, உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து நாளை பசும்பொன் சென்று அங்கு தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார்.