ஜெயலலிதாவின் ‘வேதா இல்லம்’ அருகே புது வீடு கட்டும் சசிகலா..

முன்னாள் முதல் –அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

எந்த நேரமும் அவர் விடுதலை ஆகலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

சென்னை போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் ‘வேதா இல்லத்தில்’ தான் சசிகலா இத்தனை ஆண்டுகளாக வசித்து வந்தார்.

வேதா இல்லத்தைத் தமிழக அரசு நினைவு இல்லம் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், போயஸ் கார்டனில் சசிகலா, தனக்கென தனி வீடு கட்டி வருகிறார்.

வேதா இல்லம் பகுதியிலேயே , சசிகலா கட்டும் இந்த வீடு, ஜெயலலிதா வீட்டை விட அளவில் பெரிதாகக் கட்டப்பட்டு வருகிறது.

வேதா இல்லம் போன்று, இந்த வீடும் தரைதளத்துடன் இரண்டு மாடிகளைக் கொண்டது என்றாலும், தங்கும் அறைகள் விசாலமாக இருக்கும்.

சசிகலா வீடு கட்டும் இடம் வேறொரு நிறுவனத்தில் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கு வீடு கட்ட சி.எம்.டி.ஏ. கடந்த  ஆண்டே ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாகக் கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ள போதிலும், சசிகலா ஜெயிலில் இருந்து வெளியே வரும் போது, அவரது சொந்த இல்லம் தயாராகி விடும் என்று தெரிகிறது.

-பா.பாரதி.