இந்த மாதம் 27ம் தேதி, பெங்களூரு சிறையிலிருந்து சசிகலா வெளியே வருவது உறுதியாகிவிட்டது. அவரின் வருகையை முன்வைத்து அதிமுகவில் சலசலப்புகள் இப்போதே துவங்கிவிட்டன.

சசிகலா வருகையால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற முதல்வர் எடப்பாடி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சிலர் கூறிக்கொண்டாலும், அவர்களுக்கு உள்ளுக்குள் உதறல் இல்லாமல் இல்லை. தம் சார்பாக, பல தற்காப்பு முயற்சிகளை மேற்கொண்டே வருகிறார்கள்.

இந்நிலையில், சமீப காலங்களில், தீவிர மோடி ஆதரவு மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு அமைச்சராக அறியப்பட்ட ராஜேந்திர பாலாஜியே, இப்போது சசிகலாவுக்கு ஆதரவாக பெரியளவில் கோல் அடித்திருக்கிறார். அதேசமயம், இவர் சசிகலாவுக்கு எதிரானவராக கடந்த காலங்களில் தன்னை காட்டிக் கொண்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், முதலமைச்சரின் தீவிர ஆதரவு அமைச்சர்களும், சசிகலாவுக்கு எதிராக வாயைத் திறப்பதில்லை. ஒருகாலத்தில் தர்மயுத்தம் நடத்திய பன்னீர் செல்வம், முதல்வர் பழனிச்சாமியை எதிர்கொள்ள, சசிகலாவுடன் கரம்கோர்க்க தயாராகிவிட்டார் என்று பல தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், இன்னொரு முக்கிய விஷயத்தையே நாம் பிரதானமாக கவனிக்க வேண்டியுள்ளது. சசிகலா குடும்பத்தின் பரம எதிரியாக தன்னை காட்டிக்கொண்ட ஆடிட்டர் குருமூர்த்தி, ‘சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று பேசியிருப்பது’.

அதேசமயத்தில், சசிகலாவை சாக்கடை நீர் மற்றும் அவரின் குடும்பத்தை மாஃபியா கும்பல் என்பதாக விமர்சித்தது மற்றும் அதற்கு டிடிவி தினகரனின் பதிலடி என்று இதிலும் வழுக்கி விழுந்துள்ளார் குருமூர்த்தி. அதிமுக தரப்பிலிருந்தும் அவருக்கான எதிர்க்கணைகள் பாய்ந்துள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக, மறைந்த ‘சோ’ ராமசாமியின் குடும்பத்தை ‘துக்ளக்’ விஷயத்தில் கதற விட்டுக்கொண்டிருக்கும் குருமூர்த்தி, தனது அரசியல் செயல்பாடுகளில் எத்தனைமுறை குப்புற விழுந்தாலும், தன் உடம்பில் எங்குமே மண் ஒட்டவில்லை என்று கூச்சமேயில்லாமல் கூறி, தடவி விட்டுக்கொள்கிறார்.

கடந்த 4 ஆண்டுகளாக போராடியும், தற்போது சசிகலா குழுமத்தினுடைய வலிமையின் முன்பாகத்தான் சரணடைய வேண்டிய நிலை அவருக்கு!

எனவே, சசிகலாவைப் பொறுத்தவரை, நாளை சிறையிலிருந்து விடுதலையான பின்னர், அவருக்கு முன்காலங்களில் அடிபணிந்தவர்களாக இருந்து, பின்னாளில் துரோகம் செய்த ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் போன்றோர் அவரின் முன்னே மீண்டும் கைகூப்பி, தலைதாழ்ந்து நின்றாலும்கூட, ஆடிட்டர் குருமூர்த்தியின் சரண்டர்தான் சசிகலாவுக்கான மாபெரும் அரசியல் வெற்றி..!

சிறை மீள்வதற்கு முன்னரே சிக்ஸர் அடித்துவிட்டார் சசிகலா..!