சென்னை: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு எதிராக சசிகலா திருத்த மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுமீதான விசாரணை 6ந்தேதி நடைபெற உள்ளது.

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அதிமுக இரண்டாக உடைந்து மீண்டும் இணைந்தது. ஜெயலலிதாவின் தோழியாக இருந்து அதிமுக ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த சசிகலாவும் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், எடப்பாடி, ஓபிஎஸ் தலைமையில் அதிமுக பொதுக்குழு கடந்த 2017ம் ஆண்டு கூடியது. அதில்,  அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது   தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை எதிர்த்து, சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, சென்னை 4வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதற்கிடையில்,  சசிகலாவின் இந்த வழக்கை நிராகரிக்கக்கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்தமனுவுக்கு சசிகலா தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பாக மட்டுமே தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாகவும், கட்சியின் மற்ற விவகாரங்களில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையமே தெரிவித்துள்ளதாகவும், அதனால், தனது வழக்கை நிராகிரிக்க கோரி அதிமுக நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கில் இருந்து டிடிவி தினகரன் விலகிக்கொண்டுள்ளார். அதனால், சசிகலா தரப்பில் திருத்த மனுதாக்கல் செய்யப்பட்டது.  அதில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரப்பட்டு உள்ளது.

இந்த மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை பதில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில்,   சசிகலாவின் திருத்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் விசாரணையை காலம் தாழ்த்த வேண்டுமென்ற நோக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், சசிகலாவின் திருத்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கு செப்டம்பர் 6 ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.