சென்னை
அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தோர் தாக்கப்பட்டதற்கு சசிகலா கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிமுகவில் நேற்று ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டன. அப்போது வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்த சில தொண்டர்கள் அதிமுக நிர்வாகிகளால் அடித்து விரட்டப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. அவர்கள் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் ஆதரவாளர்கள் என்பதால் விரட்டி அடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இதையொட்டி சசிகலா ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் சசிகலா, “அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் ராஜேஷ் மற்றும் பிரதாப் சிங் ஆகியோர் தாக்கப்பட்டுள்ளனர். இது எனக்கு மிகவும் வேதனை அளிக்கின்றது. இதை இனியும் என்னைப் போன்றவர்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது.
அதிமுக உள்ளிட்ட எந்த இயக்கமானாலும் தொண்டர்களை மதிக்க வேண்டும் அதிமுகவுக்குக் கொடி பிடிக்கும் தொண்டர்கள் தான் தேவை ஆகும். தடி எடுக்கும் குண்டர்கள் தேவை இல்லை. எதிரிகளை வெல்ல ஒற்றுமையுடன் இருக்க வேண்டியது அவசியம், தற்போது தொண்டர்கள் நிலையை எம் ஜி ஆரும் ஜெயலலிதாவும் கண்ணீருடன் பார்த்துக் கொண்டு இருப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.