ஆங்கிலேய ஆட்சி என்றாலே இந்தியர்களாகிய நம் பொதுபுத்திக்கு நினைவிற்கு வருவது, பிரிட்டிஷ் ஆட்சியில் நமக்கு ரயில்வே கிடைத்தது, சாலைகள் கிடைத்தது, ஆங்கிலம் கிடைத்தது என்றுதான். இவ்வாறு பெருமை பேசும் அரைவேற்காட்டு வரலாறு தெரிந்தவர்கள் அதிகம். உண்மையில், பிரிட்டன் ஆதிக்கவாதிகள் இந்தியாவுக்குள் நுழையும்போது உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு 23% ஆக இருந்தது, பிரிட்டன் நாட்டை விட்டு வெளியேறியபிறகு 4% ஆகக் குறைந்து மோசமடைந்தது. இந்திய நெசவாளர்கள் பிச்சைக்காரர்களாக மாறினர், உலகத் தரம் வாய்ந்த பருத்தி ஆடைகளின் ஏற்றுமதியாளர்களாகக் கோலோச்சிய இந்தியா இறக்குமதி நாடானது. பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் ஏற்படுத்தப் பட்ட செயற்கையான பெரு வறட்சிக்கு 15 மில்லியன் முதல் 29 மில்லியன் மக்கள் மடிந்தனர். வங்காள வறட்சிக்கு மட்டும் 40 லட்சம் மடிந்தனர், காரணம் வின்ஸ்டன் சர்ச்சிலின் கொடூரமான கொள்கைகள், 2-ம் உலகப் போரின்போது அத்தியாவசியப் பொருட்கள் பிரிட்டன் ராணுவத்துக்காகப் பதுக்கப்பட்டதும் தான் வறட்சியில் மக்கள் மடிந்ததற்கு காரணம்.
இந்தியாவில் மட்டுமல்ல, இங்கிலாந்தில் உள்ள மக்களுக்கும் இந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பு மிகவும் குறைவு. ஏனென்றால், இந்திய மற்றும் இங்கிலாந்து பாடத்திட்டத்தில் காலனியாதிக்க வரலாறு திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலாவது அரசல்புரசலாகச் கொஞ்சம் பாட்த்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், இங்கிலாந்தில் சுத்தமாக எதுவும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள பெரும்பாலான மக்கள் ஆங்கிலேய அரசு, இந்தியாவின் வளர்ச்சிக்குப் பேருதவி செய்ததாக மட்டும்தான் தெரிந்து வைத்துள்ளனர். இங்கிலாந்து 200 ஆண்டுகள் இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த்தையும், இங்கிருந்து அனைத்து வளங்களையும் கொள்ளையடித்துச் சென்றதையும், நமது விடுதலைப் போராட்ட வரலாறும் ஆங்கிலேய மக்கள் தெரிந்திருக்கவில்லை. இதற்கு காரணம், அங்கு “காலனியாதிக்க வரலாறு” ஆங்கிலேயப் பள்ளிப் பாடத்திட்டத்தில் திட்டமிட்டு இருட்ட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வரலாற்றுத் துறையில் பட்டப்படிப்பு படிப்பவர்களுக்குக் கூட “காலனியாதிக்க வரலாறு” பாடத்திட்டத்தில் இல்லை என்பதை இங்கிலாந்து பத்திரிக்கையாளர்களிடம் சுட்டிக் காட்டி, மீண்டுமொருமுறை இந்தியாவின் குரலை இங்கிலாந்து மண்ணிலேயே தைரியமாகப் பறைசாற்றியுள்ளார்.
மேலும், அவர், பிரிட்டனின் வளர்ச்சியாக விதந்தோதப்படும் தொழிற்புரட்சி, இந்தியாவை தொழிற்துறை அழிப்பு செய்ததன் மூலமே உருவானது. இந்தியாவின் பருத்தி உற்பத்தி நசுக்கப்பட்டு, சுரண்டப்பட்டு பிரிட்டன் பொருளாதாரம் வளர்ந்தது. கச்சாப்பொருட்களை இந்தியாவிலிருந்து கொள்ளை அடித்து அதனை அங்குக் கொண்டு சென்று உற்பத்தி செய்து முழுபொருட்களாக, ஆடைகளாக மீண்டும் இந்தியர்களின் நுகர்வுக்கே இந்தியாவை சந்தைப்படுத்தியது. இந்திய நெசவாளர்கள் பிச்சைக்காரர்களாக மாறினர், உலகத் தரம் வாய்ந்த பருத்தி ஆடைகளின் ஏற்றுமதியாளர்களாகக் கோலோச்சிய இந்தியா இறக்குமதி நாடானது. ( ராபர்ட் கிளைவ் இந்தி வார்த்தை ‘லூட்’ (கொள்ளை) என்பதை ஆங்கில அகராதிக்கு அளித்தார், அதனுடன் கொள்ளை என்ற பழக்கத்தையும் பிரிட்டனுக்கு அளித்துள்ளார். அவரை ‘கிளைவ் ஆஃப் இந்தியா’ என்று பிரிட்டன் வர்ணித்தது, ஆனால் நாடே கிளைவின் கொடூர வலைப்பின்னல்களுக்கு அடிமைப்படுத்தப்பட்டது. 19-ம் நூற்றாண்டு முடிவில் இந்தியா, பிரிட்டனின் மிகப்பெரிய கறவை மாடானது, பிரிட்டன் பொருட்களின் நுகர்வுச் சந்தையாக மாற்றப்பட்டது. பிரிட்டிஷ் ஊழியர்களுக்கு நாம் அதிக அளவில் சம்பளம் கொடுத்து, நமது அடக்குமுறைக்கு நாமே சம்பளம் கொடுத்துள்ளோம். இரண்டாம் உலகப்போரின்போது பிரிட்டன் படையில் 6-இல் ஒரு பங்கு இந்தியர்கள். 54,000 பேர் போரில் பலியாகியுள்ளனர். 65,000 பேர் காயமடைந்தனர். 4000 பேர் கதி என்னவென்று தெரியவில்லை, இவர்கள் சிறையில் இருந்திருக்கலாம்.
இந்த வரலாறு எதுவும் பிரிட்டன் குழந்தைகள் தெரிந்திருக்க வில்லை. இது திட்டமிட்ட சதியா என்று வினா எழுப்பியுள்ளார். பள்ளி மாணவர்கள் கூடப் பரவாயில்லை. வரலாற்றைச் சிறப்புப்பாடமாகப் படிக்கும் கல்லூரி பாடத்திட்டத்திலும் “காலனியாதிக்க வரலாறு” சேர்க்கப் படாதது ஏன் எனக் கேள்வியெழுப்பி பத்திரிக்கையாளர்களைத் திணறடித்தார்.
ஆனால், இந்த வரலாறு, இருநாடுகளிக்கிடையிலான தற்போதைய நல்லுறவை எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் தெரிவித்தார்.
காலனியாதிக்கம் என்பதே மிகப் பெரிய அளவிலான கொள்ளை, பொருளாதாரச் சுரண்டல், அபகரிப்பு மற்றும் வன்முறை என்பதாகப் பின்காலனியம் என்ற ஒரு அறிவுத்துறையாகவே இன்று வளர்ச்சியுற்று கல்விப்புலத்தில் பல நூல்கள் வெளியாகியுள்ளன. பின்காலனியம் என்பது மிகவும் பரந்துபட்ட, பல்படித்தான, பின்னல்களும், சிந்தனைப் போக்குகளும், நிலைப்பாடுகளும், அரசியல் போராட்ட கொள்கைகளும், புதிய இலக்கிய கோட்பாடுகளையும் அடக்கிய ஓர் எல்லையற்ற புலம் என்பதாக இன்று வளர்ந்து நிற்கிறது.
இதற்கு முன்னர், ஜூலை 2015ல், ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டி என்ற மிகவும் மதிப்புக்குரிய, பிரபலமான விவாத அரங்கில் காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் கலந்து கொண்டு பிரிட்டன் காலனியாதிக்கக் கொடூரங்களை தரவுகளுடன், சரளமான ஆங்கிலத்தில், பரிகாசத்துடன் கூடிய வெறுப்புடன் அல்லது வெறுப்புடன் கூடிய ஒரு பரிகாசத்துடன் புள்ளி விவரத் தரவுகளுடன் கொடுத்து அசத்தியதோடு, வெறும் 15 நிமிடப் பேச்சில் காலனியாதிக்க வரலாற்றைக் கனக்கச்சிதமாக அனைவரையும் உறையச் செய்யும் வகையில் பேசிச் சிந்தனையைத் தூண்டினார்.
அவர், ” ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி என்றெல்லாம் பிரிட்டிஷ் ஆட்சிபற்றி வாதம் எடுத்து வைக்கப்படுகிறது. சித்ரவதை, சுரண்டல், கொலைகள், வன்முறை, முடமாக்கல் என்று 200 ஆண்டுகாலம் அனைத்தையும் செய்துவிட்டு இவையெல்லாம் முடிந்தவுடன் ‘ஜனநாயகம்’ பற்றி எப்படி பேச முடிகிறது? எங்களுக்கு ஜனநாயகம் மறுக்கப்பட்டது, அதை நாங்கள் உங்களிடமிருந்து பறிக்கப் போராட வேண்டியதாக இருந்தது. இவற்றையெல்லாம் மீறிப் பிரிட்டன், இந்தியாவுக்கு நிதியுதவி அளித்தது என்று பேசப்படுகிறது, அந்த உதவி எங்கள் உள்நாட்டு உற்பத்தியில் 0.4%. நாங்கள் உரங்களுக்குக் கொடுக்கும் மானியம் இதையும் விடப் பல மடங்கு அதிகமானது” என்றார். அவரது பேச்சுக்கு ஒவ்வொரு முறையும் அரங்கமே அதிர்ந்தது. இந்திய பார்வையாளர்கள் மட்டுமல்ல, இந்த விவாதத்தில் பங்கேற்ற மற்ற கல்வியாளர்கள், மற்ற அறிவுஜீவகள் கரகோஷம் செய்து பெருத்த வரவேற்பு அளித்தனர்.
சசிதரூர் “அவமானப் பேரரசு(inglorious empire)” எனும் புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். இது மார்ச்-2ம் தேதி 2017ல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்காக அவரை சேனல்-4 எனும் தொலைக்காட்சி எடுத்த பேட்டி மேற்கண்டவாறு ச்சிதரூர் பேட்டியளித்துள்ளார்.
நன்றி: சேனல்-4.