சென்னை,
அதிமுக பொதுச்செயலாளரை, அதிமுக நட்சத்திர பேச்சாளரான நாஞ்சில் சம்பத் சந்தித்து பேசினார்.
மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து, சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
அதைத்தொடர்ந்து மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.
சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது பெரும்பாலான அதிமுக தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை. அதுபோல நட்சத்திர பேச்சாளர்களும் விரும்பவில்லை.
அதைத்தொடர்ந்து ராமராஜன், ஆனந்தராஜ், விந்தியா போன்ற பேச்சாளர்கள் கட்சியைவிட்டு விலகினர்.
தொடர்ந்து இன்னோவா சம்பத் அன்று அழைக்கப்படும் நாஞ்சில் சம்பத்தும், சசிகலா தலைமையை விரும்பாமல் அமைதியாக இருந்தார். மதிமுகவில் இருந்து அதிமுகவில் ஐக்கியமானபோது, ஜெயலலிதாவால் கொடுக்கப்பட்ட இன்னோவா காரை கடந்த வாரம் திடீரென அதிமுக தலைமை அலுவலகத்துக்கு திருப்பி அனுப்பினார்.
இதன் காரணமாக அவர் அதிமுகவில் இருந்து விலகுகிறார் என்றும்… திமுகவுக்கு செல்கிறார் என்று கூறப்பட்டு வந்தன. அவரும் கொஞ்சகாலம் அமைதியாக இருக்கப்போவதாக கூறினார்.
இந்நிலையில் திடீரென அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை நாஞ்சில் சம்பத் சந்தித்து பேசினார். சசிகலா அழைப்பை தொடர்ந்து சந்தித்தாக தெரிகிறது.
அதைத்தொடர்ந்து, நாஞ்சில் சம்பத் கூறியதாவது,
அதிமுகவில் தொடர்ந்து பணியாற்றுவேன், மேலும் சசிகலா ஆணைகளை நிறைவேற்ற தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என்றும் கூறினார்.
இதன் காரணமாக அவர் திருப்பி கொடுத்த, இன்னோவா கார் மீண்டும் அவருக்கே திருப்பி கொடுக்கப்படும் என்று தெரிகிறது…
இதுகுறித்து சமூக வலைதளங்களில் இன்னோவா சம்பத்தை கலாய்த்து வருகிறார்கள்.
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா….