சென்னை,

பொங்கல் பண்டிகையையொட்டி, வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக 17,693 சிறப்பு பஸ்களை இயக்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

அடுத்த வாரம் சனிக்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. அதையொட்டி வெளியூர்வாசிகள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள்.

இதையடுத்து, அவர்களின் வசதிக்காக வரும் புதன்கிழமை (11ந்தேதி) முதலே சிறப்பு பஸ்களை இயக்க இருக்கிறது தமிழக அரசு.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :

பொங்கலை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திட வும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் வரும் 11, 12, 13 ஆகிய 3 நாட்களுக்கும் வெளியூர் செல்லும் நீண்ட தூர பேருந்துகள் அண்ணாநகர் (மேற்கு), தாம்பரம் சானிடோரியம், பூவிருந்தவல்லி, அடையாறு பேருந்து நிலையம், கோயம்பேடு ஆகிய 5 இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 250 சிறப்பு இணைப்பு பேருந்துகள் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை 3 நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது.

மேலும் சென்னையிலிருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு செல்ல தினமும் இயக்கப்படும் 2,275 பேருந்துகளுடன்,

கூடுதலாக 11ம் தேதி 794 சிறப்பு பேருந்துகள், 12ம் தேதி 1,779ம், 13ம் தேதி 1,872ம் என 3 நாட்க ளுக்கு மொத்தம் 4 ஆயிரதது 445 சிறப்புபேருந்துகள் இயக்கப்படும்.

ஒட்டுமொத்தமாக மூன்று நாட்களிலும் சேர்த்து 11,270 பேருந்துகள் இயக்கப்படும்.

மாநிலத்தின் பிற முக்கிய ஊர்களிலிருந்து 11ம் தேதி 991 சிறப்பு பேருந்துகள், 12ம் தேதி 2,291ம் 13ம் தேதி 3,141ம் 3 நாட்களுக்கு 6,423 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

இதேபோன்று பொங்கல் பண்டிகை முடிந்த பின்பு, பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வண்ணம் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

அவை தினசரி சென்னைக்கு பிற பகுதிகளில் இருந்து இயக்கப்பட்டு வரும் 2,275 பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படும்.

கணினி மூலம் உடனடி தள முன் பதிவு செய்யும் வகையில், பொது மக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் – 26 சிறப்பு முன் பதிவு கவுண்டர்கள், தாம்பரம் சானிடோரியத்தில் 2, பூந்தமல்லியில் -1 என மொத்தம் 29 சிறப்பு முன் பதிவு கவுன்டர்கள் ஏற்படுத்தப்படும்.

இந்த சிறப்பு முன் பதிவு கவுன்டர்கள் வரும் 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை செயல்படும்.

பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 044 – 24794709 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.