சசிகலா குடும்பத்தினர், சொத்துக்காக, ஜெயலலிதாவை கொலை செய்திருக்கலாம்’ என்று விசாரணை கமிஷனில், ஜெ., அண்ணன் மகள் தீபா, மனு அளித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் , மரணம் குறித்து விசாரிக்கும், விசாரணைக் கமிஷனில், இரு தினங்களுக்கு முன், தீபாவின் கணவர், மாதவன், புகார் மனு அளித்தார். நேற்று மாலை, தீபா புகார் மனு அளித்தார்.
இது குறித்து தீபா கூறியதாவது: ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து, உறவினர்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. தகவல் அறிந்து நான் சென்றபோது, என்னை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். ஜெயலலிதா என்னை சந்திக்க விரும்புவதாக, அவரது உதவியாளர், பூங்குன்றன், பலமுறை என்னிடம் கூறினார். ஆனால், சசிகலாவும், தினகரனும் என்னை சந்திக்க அனுமதிக்கவே இல்லை. பொதுவாக ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், ரத்த சொந்தங்களுக்கு, தகவல் தெரிவிக்க வேண்டும்; ஆனால், எங்களுக்குத் தெரிவிக்கவில்லை.
ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று அவரை, சசிகலா குடும்பத்தினர் தாக்கி உள்ளனர். சொத்துக்காக அவரை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன். இது குறித்து , சசிகலா, பூங்குன்றன், ஜெ., வீட்டில் உள்ள ராஜாம்மாள், ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட அனைவரிடமும், விசாரணை நடத்த வேண்டும் என, விசாரணை கமிஷனில், மனு கொடுத்துள்ளேன்” என்று தீபா தெரிவித்தார்.