டில்லி:
இந்தி மொழியை ஐ.நா.,வில் அலுவல் மொழியாக்குவது குறித்து லோக்சபாவில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர் கேள்விகள் எழுப்பி உள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில், ஐ.நா.,வில் இந்தி மொழியை அலுவல் மொழியாக ஏன் அறிவிக்கவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சுஷ்மா, ”ஐ.நா.,வில் இந்தி மொழியை அலுவல் மொழியாக ஏன் அறிவிக்கவில்லை என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அங்கு பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறைகள் தான் இதற்கு பெரும் பிரச்னையாக உள்ளது. ஐநாவில் உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளில், 129 நாடுகள் இந்தியை அலுவல் மொழியாக்க ஆதரவாக ஓட்டளிக்க வேண்டும். அத்துடன் அதற்காகும் செலவு தொகையையும் ஆதரிக்கும் நாடுகள் ஏற்க வேண்டும். எனவே, இந்தியை ஆதரிக்க பல நாடுகள் முடிவு செய்தாலும் பொருளாதாரத்தி்ல பின் தங்கியுள்ள சில நாடுகள் இதற்கு தயக்கம் தெரிவிக்கின்றன.
இதற்காக இந்தியா நவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசு பிஜி, மொரிஷியஸ், சூரினாம் போன்ற நாடுகளின் ஆதரவை பெற முயற்சி செய்து வருகிறது. அந்த நாடுகளில் இந்திய வம்சாவளி மக்கள் வசிக்கின்றனர். அந்த நாடுகளின் ஆதரவை பெற்ற பின்னர், செலவையும் ஏற்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஐநாவில் இந்தி அலுவல் மொழியாக வருடத்திற்கு ரூ.40 கோடி செலவாகும். மத்திய அரசோ ரூ.400 கோடி கூட செலவு செய்ய தயாராக உள்ளது.
வெளிநாட்டு தலைவர்கள் இந்தியா வரும் போது, ஆங்கிலத்தில் பேசினால், நாங்களும் ஆங்கிலத்தில் பேசுகிறோம். அவர்கள், தங்கள்நாட்டு மொழியில் பேசினால், நாங்கள் இந்தியில் பேசுகிறோம். தற்போது போல், முன்னர் வெளியுறவு அமைச்சகங்கள் இந்தி மொழிக்காக அதிக பணிகள் செய்ததில்லை” என தன் பதிலில் கூறினார்.
சுஷ்மாவின் பதிலுக்கான விவாதத்தின் போது காங்கிரஸ் கட்சியின் சசிதரூர், ”இந்தி என்பது இந்தியாவின் தேசிய மொழி அல்ல. வெறும் அலுவல் மொழி மட்டுமே. அப்படி இருக்க இந்தியை மட்டும் முன்னிலைபடுத்துவது பல சந்தேகங்களை எழுப்புகிறது. இந்தியை ஏன் ஐ.நா.வில் இவ்வளவு செலவு செய்தாவது அலுவல் மொழியாக்க வேண்டும்? இந்தியை விட அரபி மொழியை குறைந்த எண்ணிக்கையில் மக்கள் பேசுகின்ற போதிலும் அம்மொழி 22 நாடுகளில் பேசப்படுகிறது. தமிழகம் அல்லது மேற்கு வங்கம் அல்லது இந்தி பேசாத மாநிலத்தை சேர்ந்த ஒருவர் பிரதமர் அல்லது வெளியுறவு அமைச்சரானால், அவர்களை ஏன் ஐ.நாவில் இந்தியில் பேச கட்டாயபடுத்த வேண்டும்?” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு சுஷ்மா, ”இந்தி மொழியை, உலகில் உள்ள பல நாடுகளில் இந்திய சமூக மக்கள் பேசுகின்றனர். பிஜியில் இந்தி அலுவல் மொழியாக உள்ளது. மொரிஷியஸ், சூரினாம், டிரினாட் டுபாகோ மற்றும் சில நாடுகளில் இந்தி மொழி பேசப்படுகிறது. இந்தியாவில் மட்டும் தான் இந்தி மொழி பேசப்படுகிறது என்பது சசி தரூரின் அறியாமையை காட்டுகிறது.” என பதில் அளித்தார்.
தற்போது சுஷ்மா தனது டுவிட்டர் பக்கத்தில், ”இந்திய மொழிகள் குறித்து எனக்கு பெருமையாக உள்ளது. அதில் சிலவற்றை என்னால் சரளமாக பேச முடியும்” எனக்கூறி, கன்னட மொழியில் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
எப்போதாவது ஐ.நாவில் ஏதாவது ஒரு இந்திய தலைவர் பேசுவதற்காக, ஆண்டுக்கு 40 கோடி ரூபாயை இந்தியா செலவு செய்வது எதிர்க்கட்சிகள் மத்தியில் கேள்விகளை எழுப்பி உள்ளது. ‛‛இதற்குப் பதில் இந்த பணத்தை வேறு ஏதாவது வளர்ச்சிப் பணிகளை செய்யலாம்” என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.