உலகின் பல்வேறு நாடுகளில் கருணைக் கொலை விவாதப் பொருளாகவே உள்ள நிலையில் கருணைக் கொலைக்கு உதவும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள கருவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ முறையால் குணப்படுத்த முடியாத நோயாளியின் கருணைக் கொலைக்கு உதவும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு கருவியை ஸ்விசர்லாந்து நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது.
‘சர்க்கோ’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இது, காற்றில் இருக்கும் ஆக்சிஜன் அளவைக் குறைப்பதன் மூலம் காற்றில் அதிகளவு உள்ள நைட்ரஜன் வாயுவை சுவாசிப்பதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிர் மூச்சு நின்றுவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவ முறையால் குணப்படுத்த முடியாத நோயாளிகளை கருணைக் கொலை செய்ய ஸ்விசர்லாந்து நாட்டில் சட்டம் இருப்பதை அடுத்து பல்வேறு கட்ட சோதனைகளை கடந்திருக்கும் இந்த புதிய கருவி இன்னும் ஓரிரு மாதங்களில் அங்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
13 லட்ச ரூபாய் மதிப்பில் 5 அடி 8 அங்குலம் உயரம் உள்ள ஒரு நபர் ஏறிப் படுத்துக் கொள்ளும் வகையில் இந்த சர்க்கோ கேப்சூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 50 வயது உடையவர்கள் மட்டுமே ஊதா நிறத்தில் உள்ள இந்த கேப்சூலை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்றபோதும் அதற்கு முன் அவர்களுக்கு மனநல மதிப்பீடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
மனநல மதிப்பீட்டிற்குப் பிறகும் உயிரை விடுவதில் உறுதியாக இருக்கும் நோயாளிகள் மட்டுமே இதில் ஏறிப் படுக்க முடியும். அப்படி இதில் ஏறிப் படுத்ததும் இதன் கதவு மூடப்பட்டு ‘நீங்கள் சாக விரும்புகிறீர்களா ?’ என்ற கேள்வி அசரீரி போல் செயலி மூலம் ஒலிக்கும்.
அதன் பின், “இந்த பட்டனை அழுத்தவும்” என்ற ஆணையைத் தொடர்ந்து பட்டனை அழுத்தியதும் 30 வினாடிகளில் அந்த கேப்சூலுக்குள் இருக்கும் ஆக்சிஜன் அளவு 21 சதவீதத்தில் இருந்து 0.05 சதவீதமாக குறைந்து விடும்.
அந்த குறைந்த அளவு ஆக்சிஜனில் ஓரிரு சுவாசத்துக்குப் பிறகு சுயநினைவை இழக்கும் அந்த நபர் தொடர்ந்து ஐந்து நிமிடம் சுயநினைவற்ற நிலையில் இருக்கும் வரை அவரது நாடித் துடிப்பு மற்றும் உடலில் ஆக்சிஜன் அளவை சர்க்கோ கருவி தொடர்ந்து கண்காணிக்கும்.
வெறும் 1700 ரூபாய் செலவில் நைட்ரஜன் வாயுவைக் கொண்டு கருணைக் கொலைக்கு உதவும் இந்த சர்க்கோ கேப்சூலை மருத்துவமனைகளில் பயன்படுத்த ஸ்விசர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெரும்பாலான மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இருந்தபோதும் கருணைக் கொலைக்கு உதவும் இந்த புதிய கருவி கருணைக் கொலைக்கு ஆதரவான மற்றும் எதிர்ப்பு விவாதத்தை உலகம் முழுவதும் மீண்டும் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், சர்க்கோ கேப்சூலை வடிவமைத்திருக்கும் தி லாஸ்ட் ரிசார்ட் என்ற அந்த அமைப்பு, அடுத்ததாக கணவன் மனைவி என்று இருவரும் ஒரேநேரத்தில் கருணைக் கொலைக்கு விருப்பம் தெரிவித்தால் இருவரும் ஒரே நேரத்தில் மரணிக்கும் வகையில் மற்றொரு கேப்சூலை வடிவமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.