சரவணபெலகோலா : அமைதி தவழும் கோமதீஸ்வரர்    

சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பிலான என் ஆய்வின்போது புத்தர் சிலைகளைத் தேடி களப்பயணம் செல்லும்போது பல இடங்களில் சமண தீர்த்தங்கரர்களின் சிலைகளைக் கண்டு பிடிக்க முடிந்தது. சமண சிலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் புதுக்கோட்டை யில் உள்ள சில சமணப்படுகைகளையும், சித்தன்னவாசலில் உள்ள சிலைகளையும் கண்டேன். அந்த ஒரு தாக்கம் சரவணகோலாவிற்குச் செல்லும் ஆர்வத்தை உண்டாக்கியது. சில ஆண்டு களுக்கு முன் பெங்களூரில் பணியாற்றிக்கொண்டிருந்த என் மூத்த மகனைக் காணச்சென்றபோது சரவணபெலகோலா சென்றேன். முழுக்க முழுக்க சிலையின் அமைப்பையும் நுணுக்கத்தையும் காணும் ஆர்வமே அதற்குக் காரணம். மறுபடியும் ஆகஸ்டு 2017இல் அங்கு மனைவி திருமதி பாக்கியவதி மற்றும் இளைய மகன் சிவகுரு உடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

கர்நாடகா மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில் (பெங்களூரிலிருந்து  100 மைல், மைசூரிலிருந்து 60 மைல், ஹாசன் ரயில் நிலையத்திலிருந்து 32 மைல் தூரத்தில்) “விந்தியகிரி”,  “தொட்டபெட்டா” (பெரியமலை),  “இந்திரகிரி” என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் விந்தியகிரி மலையில்தான் கோமதீஸ்வரர் சிலை உள்ளது. 57 அடி உயர, ஒரே கருங்கல்லால் ஆன, அந்த சிலை வடக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. இதுபோன்ற 20 அடி உயரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் இப்பகுதியில் பின்வரும் இடங்களில் காணப்படுவதாகக் கூறுகின்றனர்.

·         20 அடி, கோமதகிரி, மைசூர் மாவட்டம், 12ஆம் நூற்றாண்டு
·         42 அடி, கர்கலா, உடுப்பி மாவட்டம், கி.பி.1432
·         35 அடி, வேணூர், தென் கன்னட மாவட்டம், கி.பி.1604
·         39 அடி, தர்மஸ்தலம், தென் கன்னட மாவட்டம், கி.பி.1973


விந்தியகிரி மலை (குறியிடப்பட்ட இடத்தில் மலைக்கு செல்லும் வாயில் உள்ளது)
நுழைவாயில் கோமதீஸ்வரர் வீற்றிருக்கும் மலை கடல் மட்டத்திலிருந்து 3347 அடி உயரம் கொண்டது. இந்த மலைமீது ஏற சுமார் 500 படிகள் உள்ளன. மலையின் சுற்றளவு 1/4 மைல் ஆகும்.  மலையேற்றம் இங்கிருந்து தொடங்குகிறது
காலணி அணிந்து செல்லக்கூடாது என்ற குறிப்பு மலையடிவாரத்தில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம். காலை 6.00 மணிக்கே இவ்விடத்திற்கு வந்து சேர்ந்த நாங்கள் நுழைவாயிலைக் கடந்து படிகளை ஏற ஆரம்பித்தபோது முதலில் வேகமாக ஏறினோம். பின்னர் அலுப்பு தெரியவே சீரான, நிதானமான நடையில் நடந்தோம்.

உடன் அதிகமான எண்ணிக்கையில் சமணர்களும், பிற பக்தர்களும் நடந்து வர, எங்களுக்கு உற்சாகம் தோன்றியது. சோர்வடையும் போது ஆங்காங்கே சிறிது நேரம் அமர்ந்து சென்றோம்.

செல்லும் வழியில் ஆங்காங்கே சிறிய கோயில்கள் சன்னதிகளைப் போலக் காணப்பட்டன. அவற்றில் இருந்த தீர்த்தங்கரர்களை வணங்கிச் சென்றோம். மலையின்மீது சென்றுகொண்டிருக்கும்போது அங்கிருந்து கீழேயிருந்த குளத்தைத் தெளிவாகக் கண்டோம்.  எதிரே இருந்த சந்திரகிரி மலையைப் பார்த்தபோது மிகவும் அழகாக இருந்தது.

சமணப்படுகைகளையும் ஆங்காங்கே கண்டோம். அதில் சிலவற்றில் எழுத்துக்கள் காணப்பட்டன. பாதுகாக்கும் வகையில் அதனை கண்ணாடி போட்டு வைத்திருந்ததைக் கண்டோம்.

மலையின் உச்சிப்பகுதிக்கு வந்தபின்னர் அங்கு கோயில் போன்ற அமைப்பினைக் கண்டோம். சுற்றுச்சுவர், முன்னர் ஒரு மண்டபம், திருச்சுற்று போன்ற அமைப்பு, அதற்கு எதிராக ஒரு மண்டபம் என்ற அமைப்பில் கிட்டத்தட்ட கோயிலின் அமைப்பை ஒத்திருந்தது.

பின்னர் வெளித் திருச்சுற்றினைக் கண்டோம். அங்கிருந்து முதன்முதலாக திகம்பரராகக் (திகம்பரர் – திக் + அம்பரம், திக் – திசை, அம்பரம் – சிலையினைக் கண்டோம்.  இந்த சிலையின் பெருமையை பின்வருமாறு கூறுகின்றனர்.

மேலைக்கங்க மன்னரின் படைத்தலைவரும், அமைச்சருமான சந்திரராயனால் கி.பி.978-993இல்  நிறுவப்பட்டது.


இச்சிலை அருகரான பாகுபலிக்கு அர்ப்பணிக்கப்பட்டது .
12 ஆண்டுக்கு ஒரு முறை இச்சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.
2012இல் திருவிழா நடைபெற்றுள்ளது. அடுத்து 2025இல் நடக்கவுள்ளது.
சிலைக்கு கீழே அருகில் பெலகோலா என்ற பெரிய வெள்ளைக்குளம் உள்ளது.
1865ல் மைசூர், தலைமை கமிஷனர் திரு.பாபு ரங்கா என்பவர், பெரிய சாரம் கட்டி, சிலையின் சரியான அளவுகளைக் கண்டு பிடித்தார். அவர் கண்ட அளவின்படி சிலையின் உயரம் 57 அடி ஆகும்.
சிலையின் பெருமையினையும் வரலாற்றையும் அறிந்துகொண்டே, வெளியில் காணப்பட்ட திருச்சுற்றினை நிறைவு செய்தபோது அங்கு மூலையில் மண்டபம் போன்ற அமைப்பினைக் கண்டோம்.

சுற்றை நிறைவு செய்தபின் முன் மண்டபம் வழியாக நுழைவாயிலை நெருங்கினோம். குனிந்துகொண்டே நிலையைக் கடந்தோம். உள்ளே நுழைந்தவுடன் பிரம்மாண்டமாக நிற்கின்ற கோமதீஸ்வரரைக் கண்டோம். “நெடிது உயர்ந்த இச்சிலையின் அமைப்பு பார்ப்பவர்களின் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கும் தன்மையுடையது. உயர்ந்த புருவம். படர்ந்த நெற்றி. சுருண்ட முடி. கருணையும், புன்முறுவலும் நிறைந்த முகம். நீண்ட அழகிய செவிகள்.  தியான நிலையிலும் சிறிது அலர்ந்த கண்கள். உயர்ந்தும், பரந்தும் காட்சிதரும்  மார்பு. நீண்ட கொடி போன்ற இரு கைகள். தொழுது வணங்கும் தொண்டர்களுக்கு இன்பம் பயக்கும் திருவடிகள். உடலில் மாதவிக் கொடி. முழங்காலுக்கருகே படமெடுத்தாடும் பாம்புள்ள புற்று. திருவடிக்கு கீழே மலர்ந்த நிலையில் உள்ள ஒரு தாமரை. இச்சிலையின் மீது, எத்தகைய நிழலும் விழுவதில்லை.”

கோமதீஸ்வரரைப் பற்றி சற்று சிந்திப்போம். சமணர்களால் போற்றப்படும் 24 தீர்த்தங்கரர்களுள் ரிஷபதேவர் முதலாமவர் ஆவார். அவருக்கு நூறு புதல்வர்கள் இருந்ததாகவும் அவர்களில் முதலாமவர்  பரதன் என்றும், இரண்டாவது மகன் பாகுபலி என்றும் கூறுவர். பரதனுக்கு முடிசூட்டு விழா நடைபெற்றதால், பாகுபலி தன் சகோதரனோடு போரிடுகிறார். பெற்றி பெறுகிறார். தோற்றுப்போன தன் தமையனின் வாடிய முகத்தைக் கண்டு, பாகுபலி துறவறம் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சிலைக்கு முன்பாக கொடி மரம் போன்ற அமைப்பு இருந்தது. சிலையின் காலுக்குக் கீழே சிறிய அளவிலான உருவம் இருந்தது. வணங்க வருவோர் அச்சிலைக்கு அபிஷேகம் செய்வதைக் காணமுடிந்தது.

சிலைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த இடத்தில் பலர் அமர்ந்த நிலையில் தியானம் செய்துகொண்டிருந்தனர். அவர்களுடன் சிறிது நேரம் அமர்ந்து அமைதி தவழும் கோமதீஸ்வரரின் முகத்தைப் பார்த்தோம். முகப்பில் சுதையாலான உருவங்களை அங்கு அதிகமாகக் காணமுடிந்தது. பின்னர் சிலையின் வலப்புறம் உள்ள பாதையின் வழியாக உள்ளே காணப்பட்ட உள் திருச்சுற்றினைக் கண்டோம். அங்கு பல தீர்த்தங்கரர் சிலைகளைக் கண்டோம். பிறகு சிலையின் இடது புறம் வழியாக வந்து முன் மண்டபத்தை அடைந்தோம்.ஒரே கல்லால் வடிக்கப்பட்ட சிலையைக் கண்டு வெளியே வந்தபோது கோட்டைச்சுவர் போன்று காணப்பட்ட சுற்றுச்சுவரை மறுபடியும் கண்டு வியந்தோம். சிறிது நேரம் அங்கிருந்து இயற்கையின் அழகை ரசித்துவிட்டு கீழே இறங்க ஆரம்பித்தோம்.

ஏறும்போது சுமார் முக்கால் மணி நேரம் ஆனது. இறங்கும்போது சுமார் 20 நிமிடமே ஆனது. மிக எளிதாக அடிவாரத்தை வந்தடைந்தோம். வாய்ப்பு கிடைக்கும்போது சரவணபெலகோலா செல்வோம், அமைதியே உருவான கோமதீஸ்வரரைக் காண்போம், கலையழகை ரசிப்போம். இறையுணர்வைப் பெறுவோம்.