சென்னை: செக் மோசடி தொடர்பான வழக்கில் நடிகர் சரத்குமார், அவரது மனைவி நடிகை ராதிகாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் சரத்குமார் மற்றும் ஸ்டீபன் பங்குதாரராக இருக்கும் மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம், கடந்த 2014-ஆம் ஆண்டு விக்ரம் பிரபு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து மாயம் என்ற பெயரில் படம் தயாரிக்க திட்டமிட்டு இருந்தது. அதற்காக ஒன்றரை கோடி ரூபாய் ரேடியன்ஸ் நிறுவனத்திடம் கடனாக வாங்கி இருந்தனர். ஆனால் திட்டமிட்டபடி படம் தயாரிக்கப்படாத நிலையில், பணத்தையும் திரும்பி வழங்கவில்லை. ஆனால் பணத்தை பயன்படுத்தி, பாம்பு சட்டை என்ற பெயரில் வேறு ஒரு படம் தயாரித்தது.
இதைத்தொடர்ந்து, மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம், ரேடியன்ஸ் நிறுவனத்திற்கு 2 காசோலலைகள் வழங்கப்பட்டது. ஆனால், அந்த 2 காசோலைகளும் வங்கியில் பணமில்லாமல் செக் பவுன்ஸ் ஆகியது. இதையடுத்து நீதிமன்றத்தில் ரேடியன்ஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான 7 வழக்குகளில் சரத்குமார் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டார். 2 வழக்குகளில் ராதிகா மற்றும் மற்றுமொரு பங்குதாரர் ஸ்டீபன் ஆகியோரும் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கை சென்னையில் உள்ள எம்பி எம்எல்ஏக்கள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, 7 வழக்குகளில் எதிர் மனுதாரராக இருக்கும் சரத்குமாருக்கு தலா ஒரு வருடம், ராதிகாவுக்கும், ஸ்டீபனுக்கும் 2 வழக்குகளில் தலா ஒரு வருடம் சிறை என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, சரத்குமார், ராதிகா தரப்பில் நீதிமன்றத்தில் தீர்ப்பை நிறுத்தி வைக்க முறையிடப்பட்டுள்ளது.