சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சியும், திமுக கூட்டணியில் இருந்து இந்திய ஜனநாயக கட்சியும் வெளியேறியது.

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. அதில் தமிழகத்துக்கு ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். தேர்தல் முடிவுகள் 5 மாநிலங்களுக்கும் சேர்த்து மே 2ம் தேதி வெளியாகும் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடுகளில் மாற்றம் தெரிய ஆரம்பித்துள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்த சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி அக்கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து இருக்கிறது.

இதேபோன்று திமுக கூட்டணியில் இருந்து பச்சை முத்துவின் இந்திய ஜனநாயக கட்சியும் வெளியேறிவிட்டது. இவ்விரு கட்சிகளும் இணைந்து சட்டசபை தேர்தலை சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளன.

தங்களது கூட்டணியில் இணைய இருக்கும் கட்சிகள் எவை என்பது பற்றிய விவரம் பின்னர் வெளியிடப்படும் என்றும் அக்கட்சிகள் கூட்டாக அறிவித்து உள்ளன. விஜயகாந்த், கமல்ஹாசன் இருவரும் தங்களது கூட்டணிக்கு வர வேண்டும் என்று சரத்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.