கோலாப்பூர்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தனது தேர்தல் கூட்டத்தில் மோடியை கடுமையாக தாக்கி பேசி உள்ளர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. மக்களவை தேர்தலில் இந்த கூட்டணி வேட்பாளர்களுக்காக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மாநிலம் எங்கும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அவ்வகையில் கோலாப்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தனஞ்செய் மகாதிக் என்னும் தேசிய வாத காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து சரத் பவார் ஒரு பேரணியில் பேசினார்.
சரத் பவார் தனது உரையில், “சென்ற மக்களவை தேர்தல் பிரசாரத்தில் மோடி தாம் ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் கருப்புப் பணம் முழுவதையும் வெளிக் கொணர்வேன் என கூறினார். அது மட்டுமின்றி அவ்வாறு நடக்கவில்லை என்றால் தாம் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை ஏற்றுக் கொள்வதாக மோடி சவால் விட்டார். ஆனால் இது வரை கருப்புப் பணத்தை அவர் வெளிக் கொண்டு வரவில்லை.
அப்படியானால் அவர் அளித்த வாக்குறுதியின் நிலை என்ன? எனக்கு யாரையும் பொது மக்கள் முன்னிலையில் தூக்கில் இட விருப்பம் கிடையாது. மோடி வாக்குறுதி தவறுவதற்கு இது இன்னொரு எடுத்துக் காட்டு என்பதால் கூறினேன். இந்த வாக்கு தவறுதல் மோடிக்கு மட்டுமின்றி மத்திய அமைச்சர் உமா பாரதிக்கும் உள்ளது.
கடந்த 2017 ஆம் வருடம் அமைச்சர் உமா பாரதி கங்கை தூய்மை படுத்துவது பற்றிஅறிக்கை விடுத்தார். அப்போது உமா பாரதி கங்கை தூய்மை திட்டம் 2018 அக்டோபர் மாதத்துக்குள் தொடங்கப்படவில்லை என்றால் தாம் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிக்கையில் தெரிவித்தார். ஆனால் அந்த புனித கங்கை நதி இன்னும் மாசுபட்டுக் கொண்டு இருக்கிறது. ஆனால் உமா பாரதி இன்னும் உண்ணாவிரதத்தை தொடங்கவில்லை.” என தெரிவித்துள்ளார்.