சனீஸ்வர பகவான் திருக்கோயில், குச்சனூர், தேனி மாவட்டம்.

தினகரன் என்ற மன்னன் குழந்தை வரம் வேண்டி இறைவனிடம் வேண்டினான். அப்போது அசரீரி ஒன்று உன் வீட்டுக்கு ஒரு பிராமணச் சிறுவன் வருவான். அவன் வந்த பிறகு உனக்கு குழந்தை பிறக்கும் என்றது. அதுபடியே வந்த சிறுவனுக்கு சந்திரவதனன் என்று பெயரிட்டு வளர்த்தான். அரசிக்கும் குழந்தை பிறந்து சதாகன் என்ற பெயருடன் வளர்ந்தான். புத்திசாலியான வளர்ப்பு மகன் சந்திரவதனனுக்கே முடி சூட்டப்பட்டது.

இந்நிலையில் மன்னன் தினகரனுக்கு ஏழரைச்சனி பிடித்தது. இதனால் சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்கு சென்று இரும்பால் சனியின் உருவத்தை படைத்து வழிபட்டான். “வளர்ப்பு மகனான எனக்கு முடிசூட்டிய என் தந்தைக்கு துன்பம் தராதே அத்துன்பத்தை எனக்கு கொடு” என்று வேண்டினான். சனீஸ்வர பவகவான் அவனது நியாயத்தை உணர்ந்து ஏழரை நாழிகை மட்டும் அவனை பிடித்துக்கொள்வதாகக் கூறி பல கஷ்டங்களைக் கொடுத்தார்.

பின்பு அவன் முன் தோன்றி உன்னைப்போன்ற நியாயஸ்தர்களைப் பிடிக்க மாட்டேன் என்றும் இப்போது உன்னை பிடித்தற்கு காரணம் உன் முன் ஜென்ம வினை என்று கூறி மறைந்தார். பிறகு சந்திரவதனன் இவ்வூரில் குச்சுப்புல்லால் கூறை வேய்ந்து கோயில் எழுப்பினான் என வரலாறு கூறகிறது. இதுவே குச்சனூர் என பெயர் வழங்க காரணமாயிற்று.

சனிபகவானுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடித்து நீங்கினதாக வரலாறு பெற்ற தலம். சனிபகவான் சுயம்புவாய் எழுந்தருளியுள்ள ஒரே தலம். சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுதல் மிகவும் சிறப்பு.

கோயில்கள் அனைத்திலும் சனிபகவான் நவக்கிரகமாக வீற்றிருந்தாலும் தமிழ்நாட்டில் திருநள்ளாறுக்கு அடுத்து சுயம்புவாக வீற்றிருப்பது தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வரன் கோயிலில்தான். அரூபி வடிவ இலிங்கம் பூமியிலிருந்து வளர்ந்து கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த மஞ்சன காப்பு பூசப்பட்ட நிலையிலேயே சுயம்பு உள்ளது.

திருவிழா:

5 வார ஆடிப் பெருந்திருவிழா, இரண்டரை வருடத்திற்கொரு முறை சனிப்பெயர்ச்சித் திருவிழா.

வேண்டுகோள்:

சனி தோசம் உள்ளவர்கள் இங்கு மனமுருக வேண்டிக்கொண்டால் அவர்களுக்கு சோதனைகள் விலகி சுபிட்சம் கிடைக்கிறது. மேலும் புதிய தொழில் தொடங்க, வியாபார விருத்தி மற்றும் குடும்ப நலம் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் இத்தலத்துக்கு வந்து வேண்டிக்கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பகவானுக்கு எள் விளக்கு போடுதல், காக்கைக்கு அன்னமிடல் ஆகியவற்றை செய்யலாம். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்