டெல்லி: சானிடைசருக்கு தேவையான எத்தனால் உற்பத்திக்கு அரிசியை பயன்படுத்தலாம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஒழிப்பில் இப்போதைக்கு அதி முக்கியமானதாக கருதப்படுவது கைகளை சுத்தப்படுத்தும் சானிடைசர் திரவமாகும். கொரோனா பரவல் அதிகமாகி இருப்பதால் எத்தனால் தட்டுப்பாடு அதிகம் காணப்படுகிறது.
இந்த சானிடைசரை தயாரிக்க எத்தனால் ரொம்ப அவசியமாகும். 65 சதவீதம் எத்தனால் கலந்தால் தான் சானிடைசர் தயாரிக்க முடியும். ஆகையால், அத்தகைய எத்தனாலை தயாரிக்க இந்திய உணவுக் கழகத்தில் இருந்து அபரிமிதமாக, உபரியாக இருக்கும் அரிசியை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதற்கான ஒப்புதல் தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்பு குழுவில் நேற்று வழங்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் அவர் கூறி இருப்பதாவது:
ஏழை மக்கள் பட்டினியால் மடிந்து வருகின்றனர். ஆனால், அரசோ சானிடைசர் தயாரிக்கும் எத்தனாலுக்காக அரிசியை பயன்படுத்த அனுமதித்துள்ளது. இந்தியாவில் உள்ள ஏழைகள் எப்போது விழிப்படைவார்கள்?
நீங்கள் பசியில் செத்து மடிகிறீர்கள். ஆனால், அவர்கள் பணக்காரர்கள் கைகளை கழுவும் சானிடைசருக்காக, உங்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் அரிசியை பயன்படுத்துகிறார்கள் என்று கூறி உள்ளார்.