சென்னை: திமுக அரசின் தனியார் மயத்தை கண்டித்து போராடிய தூய்மை பணியாளர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு நீதிமன்ற உத்தரவுபடி வேலைவழங்காமல், 71 நாட்களாக வேலை இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
இதையடுத்து, துய்மை பணியாளர்கள் சுமார் 1500 பேர் இன்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். . இது பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை மாநகராட்சி தூய்மை பணிகள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட நிலையில், பணியிழந்த தூய்மை பணியாளர்கள் கடந்த 71 நாட்களாக போராடி வருகின்றனர். இதுவரை தங்களுக்கு உரிய பணி வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டும் அவர்கள் இன்று இன்று ரிப்பன் மாளிகை அருகில் உள்ள மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6-வது மண்டலங்களைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றம் அனுமதி பெற்றுப் போராட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்த நிலையில், தங்கள் கோரிக்கை மனுவைக் கொடுக்க ஆணையரைச் சந்திக்கச் சென்றபோது இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தூய்மைப் பணியாளர்களின் மையக் கோரிக்கை, தங்களுக்கு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து நேரடியாகச் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பதுதான். அதாவது, தங்களது வேலைகள் தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் செல்வதையும், அதன் மூலம் சம்பளம் பெறுவதையும் அவர்கள் விரும்பவில்லை. முன்னதாக, தங்களுக்கு ரூ.23,000 சம்பளமாக வழங்கப்பட்டது. ஆனால், தற்போது தனியார் நிறுவனம் மூலம் ரூ.16,000 மட்டுமே கிடைப்பதாகவும், இதனால் தங்களுக்கு மாதம் ரூ.6,000 முதல் 7,000 வரை வருமானம் குறைவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தங்கள் ஊதியத்தைக் கூட்டித் தர வேண்டும் என்றும், தங்கள் வேலைகளை மாநகராட்சி நேரடியாக ஏற்று நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (NULM) கீழ் பணிபுரிந்த ஊழியர்கள், தங்களுக்கு வேலை வழங்கக் கோரி மாநகராட்சி மேயர் பிரியாவிடம் மனு அளிப்பதன் மூலம் புதிய கட்டப் போராட்டத்தை அறிவித்தனர். தொடர்ச்சியாக, கோஷங்களை எழுப்பியும், மனுக்களைச் சமர்ப்பித்தும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சி.எம்.டி.ஏ பொறுப்பு அமைச்சர் சேகர்பாபு, மேயர் ஆர். பிரியா, மாநகராட்சி ஆணையர் ஜே. குமரகுருபரன் மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்களின் வீடுகளுக்கும் சென்று இந்தப் பணியாளர்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்க இருந்தனர்.
முன்னதாக நேற்று (வியாழக்கிழமை) மாலை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கே. பாரதி பேசுகையில், “பட்டியலின சமூகங்களைச் சேர்ந்த இந்தப் பெண் ஊழியர்கள் கிட்டத்தட்ட 70 நாட்களாக வேலை இல்லாமல் அன்றாட வாழ்க்கையை நடத்தச் சிரமப்படுகிறார்கள். இதற்கு ஒரு தீர்வுகாணவும், சென்னை மாநகராட்சியின் கீழ் வேலை பெறவும், அமைச்சர்கள், மேயர், ஆணையர், கவுன்சிலர்கள் ஆகியோரின் வீடுகளுக்குச் சென்று துப்புரவுப் பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மேலும், மண்டல அலுவலகங்களையும் முற்றுகையிடத் திட்டமிட்டுள்ளனர்,” என்று தெரிவித்தார்.
மேலும், “சென்னை மாநகராட்சியின் கீழ் எங்களுக்கு வேலை கொடுங்கள், இல்லையேல் எங்களைப் புழல் சிறையில் அடைத்துவிடுங்கள்,” என்ற கோஷத்தை எழுப்பிப் பணியாளர்கள் தங்களது போராட்டத்தைத் தொடர்வார்கள் என்றும் பாரதி கூறினார்.
அக்டோபர் 6 அன்று இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சி தரப்பில், 823 துப்புரவுப் பணியாளர்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் (CESPL) பணியில் சேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை மறுத்த உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர் பாரதி, “மாநகராட்சி கூறியது உண்மையல்ல. கடந்த சில நாட்களாக, 1,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டல அலுவலகங்களில் சென்னை மாநகராட்சியின் கீழ் வேலை வழங்கக் கோரி மனுக்களைச் சமர்ப்பித்துள்ளனர்,” என்று தெரிவித்தார்.
மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையிலும், இந்தப் பிரச்சனை தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில் இன்றைய முற்றுகை போராட்டம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.