சென்னை: சென்னை எழும்பூரில் கூவம் ஆற்றின் உள்ளே இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறை யினர் அவர்களை கைது செய்துஅழைத்துசென்றனர்.

தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கக் கூடாது, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ரிப்பன் மாளிகை முன்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 நாட்களுக்கும் மேலாக தூய்மைப் பணியாளர்கள் நடத்திய போராட்டம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, அவர்களை காவல்துறையினர் இரவோடு இரவாக இழுத்துச்சென்று கைது செய்தனர். அப்போது பலர் தாக்குதலுக்கு ஆளானதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களின் போராட்டம் 4 மாதங்களை கடந்து தொடர்ந்து வருகிறது. திடீர் திடீரென பல இடங்களில் போராட்டத்தை நடத்திய ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர். 2025 டிசம்பர் 12-ஆம் தேதி தூய்மைப் பணியாளர்கள் முதலில் சென்னை மெரினா காமராஜர் சாலையில், உழைப்பாளர் சிலை அருகே உள்ள எழிலகம் கட்டிடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இதனையடுத்து கருணாநிதி நினைவிடம் அருகே தூய்மைப் பணியாளர்களின் மற்றொரு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மதியம் 12:30 மணியளவில் தலைமைச் செயலகம் முன்பு போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அண்ணா அறிவாலயம், ரிப்பன் மாளிகை என அடுத்தடுத்து பல இடங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர. மேலும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் சென்னை முழுவதும் போராட்டம் தொடரும் என்றும் எச்சரித்தனர்.
இந்த நிலையில், இன்று எழும்பூரில் உள்ள கூவம் ஆற்றில் இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். கூவம் ஆற்றின் உள்ளே இறங்கிய ஏராளமான தூய்மைப் பணியாளர்கள், கோரிக்கைகள் அடங்கிய வாசகங்களை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
[youtube-feed feed=1]