ஐதராபாத்: அர்ப்பணிப்பு உணர்வுக்காக டென்னிஸ் போட்டிகளில் வழங்கப்படும் ‘ஹார்ட் விருது’, இந்தியாவின் சார்பில் முதன்முறையாக சானியா மிர்ஸாவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பெண்கள் டென்னிஸின் உலகக்கோப்பை என்றழைக்கப்படும் ‘பெடரேஷன்’ தொடரில் இவர் தனது 18 மாத மகனுடன் பயிற்சிக்காக களமிறங்கினார். இவரின் அந்தப் புகைப்படம் பெரிதும் வைரலானது மற்றும் பலரின் உள்ளத்தையும் கவர்ந்தது.
மேலும், அத்தொடரில் இந்திய அணி பிளே ஆஃப் சுற்றுவரை முன்னேறுவதற்கு உதவியாக இருந்தார். இவர் ‘ஹார்ட்’ விருதுக்கு ஓசியானா பிரிவிலிருந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இவரைத் தவிர, இந்தப் பிரிவில் இந்தோனேஷிய வீராங்கனை பிரிஸ்காவின் பெயரும் உள்ளது.
மே மாதம் 8ம் தேதி வரை நடைபெறவுள்ள வாக்கெடுப்பின் முடிவில் வெற்றியாளர் அறிவிக்கப்படுவர்.
“இந்தியாவுக்காக கடந்த 2003ம் ஆண்டு ஜெர்ஸி அணிந்து முதன்முதலாக களமிறங்கியது மகிழ்ச்சியான தருணம். பெடரேஷன் தொடரில் சிறப்பாக செயல்பட்டது எனது டென்னிஸ் பயணத்தில் மிகவும் முக்கியமானது. விருதுக் குழுவின் அங்கீகாரம் மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. இதுபோன்ற தருணங்களுக்காகத்தான் விளையாட்டு நட்சத்திரங்கள் காத்திருக்கின்றனர்” என்றார் சானியா மிர்ஸா.