நடிகை சங்கீதா மீது அவரின் தாய் பானுமதி தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அதை தொடர்ந்து தமிழ்நாடு மகளிர் ஆணையம் சங்கீதாவிற்கு சம்மன் அனுப்பியிருந்தது .

அந்த புகாரில் தன் தாய் பானுமதியை வீட்டை விட்டு வெளியேற சங்கீதா சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் வயதான என்னை வெளியேற்றிவிட்டு நான் வசித்துவரும் வீட்டை அபகரிக்க முயல்கிறார் என் மகள் சங்கீதா என தாய் பானுமதி புகார் அளித்துள்ளார் .

இந்த சர்ச்சைத் தொடர்பாக சங்கீதா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

”அன்புள்ள அம்மா.. என்னை இந்த உலகுக்குக் கொண்டு வந்ததற்காக நன்றி. எனது பள்ளிப் படிப்பை நிறுத்துவிட்டு 13 வயதிலேயே வேலையில் சேர்த்தாயே.. அதற்கும் நன்றி. வெற்றுக் காசோலைகளில் நீ காட்டிய இடமெல்லாம் கையெழுத்து போட வைத்தாய்.. நன்றி.

வேலைக்கே செல்லாமல். உழைப்பே தெரியாத.. உனது மகன்களின் மது, போதை சுகத்துக்காக என்னை தவறாகப் பயன்படுத்தினாய். அதற்கு ஒரு நன்றி.

நான் உன்னிடம் சண்டை போட்டு பிரியும் வரை எனக்கு திருமணம் செய்து வைக்காமல் இருந்தாய்.. அதற்காக மிகப் பெரிய நன்றி. எனது கணவருக்குத் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து எனது குடும்ப அமைதிக்குப் பாதகம் செய்தாய்.. அதற்கு நன்றி. ஒரு தாய் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு எனக்கு உதாரணமாக இருந்தாய்.. அதற்கு ஒரு நன்றி.

கடைசியாக என் மீது போலியான புகார்களை அடுக்கிக் கொண்டிருக்கிறாய். அதற்கும் நன்றியே. ஏனெனில் தெரிந்தோ தெரியாமலோ நீ என்னை ஒரு மவுனக் குழந்தையில் இருந்து போராளியாக, முதிர்ச்சியான பார்வை கொண்டவராக உருவாக்கி இருக்கிறாய். உன்னால்தான் நான் துணிச்சலான தைரியமான பெண்ணாக இருக்கிறேன். இந்த ஒரு காரணத்திற்காக நான் எப்போதுமே உன்னை நேசிப்பேன்.

ஒரு நாள் உங்கள் மமதையிலிருந்து விடுபட்டு, என்னை நினைத்துப் பெருமை கொள்வாய்”.என்று பதிவிட்டுள்ளார்