பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு இரண்டு வாயில்கள். கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாக அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றுமன்றி ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறது.
வேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த சந்நிதியின் வலப்பக்கம் சுப்பிரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. சுப்பிரமணியர் சந்நிதியைக் கடந்து சென்றால் இந்தக் கோவிலின் மூலவரான சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இது ஒரு சுயம்பு லிங்கம். சுப்பிரமணியக் கடவுளாம் முருகனுக்கு அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிக்கு நடுவில் சந்நிதி அமந்திருப்பது இந்தக் கோவிலின் சிறப்பம்சம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும்.
தமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலங்களில் பவானியும் ஒன்றாகும். பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோஷங்களுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது. காவிரி, பவானி நதிகள் கூடும் சங்கமத் துறையில் காயத்ரி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. முனிவர் விஸ்வாமித்திரரால் காயத்ரி மந்திரம் சொல்லி பிரதிஷ்டை செய்யப்பட்டதால் காயத்ரி லிங்கேஸ்வரர் என்று பெயர். இக்கோவில் அருகே பரிகார பூஜைகள் தினந்தோறும் நடந்தபடி இருப்பதைக் காணலாம். இந்த ஊரில் எரிக்கப்படும் சடலங்களின் மண்டை ஓடு வெடித்து சிதறுவதில்லையாம். இத்தலத்து மண்ணிற்குள் ஏராளமான சிவலிங்கங்கள் இருப்பதால் இவ்வாறு நடப்பதாக கூறப்படுகிறது.
கோவிலின் தென்மேற்கு மூலையில் உள்ள தல விருட்சம் இலந்தை மரம் தனி சிறப்பு கொண்டது. வேதமே மரவடிவெடுத்து வந்திருப்பதாக ஐதீகம். இங்கு தான் குபேரனுக்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக தரிசனம் தந்துள்ளார். இம்மரம் தினமும் இறைவனின் நைவேத்தியத்திற்கு சுவைமிக்க பழங்களை தருகிறது.
இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். முருகன் சந்நிதிக்கு அருகில் ஜ்வரஹரேஸ்வரர் திரு உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது அவருடைய அடியார்களை ஜுரநோய் பீடிக்க, இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றார்கள் என கூறப்படுகிறது. கோவிலின் தெற்குப் பக்கம் 63 நாயன்மார்கள் திரு உருவங்கள் உள்ளன.
கொங்கு நாட்டுத் தலங்கள் எல்லாவற்றிலும் சனீஸ்வர பகவானுக்கு தனி சந்நிதி இருக்கும். இத்தலத்திலும் சனீஸ்வர பகவானுக்கு தனி சந்நிதி உண்டு. இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று மக்கள் நம்புகின்றனர். மேலும் இக்கோவிலில் உள்ள அமிர்தலிங்கேஸ்வரர் சந்நிதி சிறப்புடையதாகும். லிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் எனபது மக்களின் நம்பிக்கையாகும்.