சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மணல் குவாரி முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு டிஜிபிக்கு அமலாக்கத்துறை பரபரப்பு கடிதம் எழுதி உள்ளது. அதில், அரசு 490 ஏக்கர் அளவுக்கு மணல் அள்ள அனுமதி அளித்துள்ள நிலையில் 2,450 ஏக்கர் அளவுக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என குற்றம் சாட்டி உள்ளது.
தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக மணல் அள்ளும் விவகாரத்தில் 4,730 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே அமலாக்கத்துறை சார்பில் வருமான வரித்துறை, ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு கடிதம் எழுதப்பட்ட நிலையில், தற்போது டிஜிபிக்கு கடிதம் எழுதி உள்ளது. இந்த விவகாரத்தில் மாநில அரசு முறையான நடவடிக்கை எடுக்க தவறி விட்டதாக குற்றம் சாட்டி உள்ளது.
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளப்பட்டு சட்ட விரோதமாக மணல் விற்பனை செய்வதாகவும், அதன் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தை சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாகவும், இதனால் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடப்பதாகவும் அமலாக்கத் துறைக்கு புகார்கள் சென்றன. மணல் குவாரிகள் மூலம் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் மணல் அள்ளப்பட்டு உள்ளதும், இதன்மூலம் தமிழகத்தில் சுமார்ரூ.4,730 கோடி அளவுக்கு மணல் கொள்ளை நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பான புகார்களின் பேரில் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மணல் குவாரிகளில் அதிரடி சோதனைமேற்கொண்டனர். அதனப்டி, திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சை, வேலூர், புதுக்கோட்டை உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள், இடைத்தரகர்கள் மற்றும் அவர்கள் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அரசு அதிகாரிகளின் அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மணல் குவாரிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு காட்சிகள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், மணல் குவாரிகளில் சேமித்து வைத்திருந்த மணல் அளவு, விற்பனை செய்யப்பட்ட அளவு குறித்தும் கணக்கெடுக்கப்பட்டது. அதோடு மட்டுமில்லாது ஐஐடி கான்பூர் நிபுணத்துவத்தை பயன்படுத்தி அனைத்து மணல் அகழ்வு தளங்களிலும் தொழில்நுட்ப ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள், மாவட்ட கலெக்டர்கள் உட்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்கள், அதிகாரிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவர்களது அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து விசாரித்தனர். அவர்கள் அளித்த பதில்களை வாக்குமூலமாக பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதும், பினாமி பெயர்களில் சில ஆவணங்கள் இருந்ததும், போலி பில்கள் மூலம் மணல் விற்பனை செய்து ஜி.எஸ்.டிக்கு வரி இழப்பை ஏற்படுத்தி இருந்ததும் கண்டறியப்பட்டது. மொத்தம் சுமார் ரூ.4,730 கோடி அளவுக்கு மணல் விற்பனை நடைபெற்றிருந்த நிலையில் கணக்கு புத்தகத்தில் வருவாய் ரூ.36.45 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் மணல் குவாரி முறைகேடு தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில், இந்த முறைகேட்டில் பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்துள்ள காரணத்தால் இதுபற்றி முழுமையாக விசாரிக்குமாறு வருமான வரித்துறை மற்றும் ஜி.எஸ்.டி. விசாரணை குழுவுக்கு அமலாக்கத் துறை அண்மையில் கடிதம் எழுதி இருந்தது.
இந்த நிலையில், மணல்குவாரி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள்மீது மாநில அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமலாக்கத்துறை சார்பில் தமிழ்நாடு டிஜிபிக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. அந்த கடிதத்தில், “பணப்பரிவர்த்தனை முறைகேடு தடுப்புச் சட்டம் பிரிவு 66(2) இன் படி இந்த கடிதத்தை அமலாக்கத்துறை அனுப்பி உள்ளது. அதில் கடந்த 9 மாதங்களாக நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தில் 2023 மற்றும் 24 காலத்தில் சட்ட விரோதமாக 23.64 லட்சம் யூனிட் அளவுக்கு மணல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
குத்தகைக்கு விடப்பட்ட மணல் படுகைகளில் மணல் அள்ளும் இயந்திரங்கள் மூலமாக தனியார் ஒப்பந்ததாரர்கள் எப்படி மணலை சட்டவிரோதமாக எடுத்தனர் என்பது குறித்து விரிவான தகவல்களையும் அமலாக்கத்துறை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை விட 10 முதல் 30 மடங்கு அதிகமாக மணல் எடுத்துள்ளனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஒரே இடத்தில் 4.9 ஹெக்டேரில் மணல் எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. மொத்தம் ஐந்து மாவட்டங்களில் 190 ஹெட் பரப்பளவில் 28 இடங்களில் மணல் எடுக்க குத்தகைதாரர்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சட்ட விரோதமாக 987 ஹெக்டேர் பரப்பளவுக்கு மணல் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது அமலாக்கத்துறை தங்கள் நடத்திய பல்வேறு விஞ்ஞான பூர்வ ஆய்வுகள் மூலம் இந்த முறைகேடுகளை உறுதி செய்து இருப்பதாகவும் குறிப்பாக செயற்கைக்கோள் படங்கள் ஆளில்லா விமானங்கள் எடுக்கப்பட்ட படங்கள் மூலமாகவும் இதை உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மணல் எடுக்க 273 மணல் அல்லும் எந்திரங்கள் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது இந்த மணல் கொள்ளை மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது அதே நேரத்தில் மணல் ஒப்பந்ததாரர்கள் குறிப்பிடத்தக்க பெரிய லாபத்தை அடைந்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது
தமிழக அரசு நீர்வளத்துறை அனுமதி அளித்துள்ள குவாரிகளில் மணல் கொள்ளை நடந்துள்ளது. இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் குவாரிகளில் மணல் எடுக்க அனுமதி பெற்ற ஒப்பந்ததாரர்கள் புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் உள்ளிட்டோர் வீடுகள், அலுவலகங்களில் நடத்திய சோதனை முடிவில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதன் அடிப்படையில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஐஐடி நிபுணர்கள் உதவியுடன் அறிவியல் பூர்வமாக எந்த ஆழத்திற்கு எவ்வளவு மணல் அள்ளப்பட்டது என ஆய்வு நடத்தப்பட்டது. தொடர் விசாரணையில் அரசு 490 ஏக்கர் அளவுக்கு மணல் அள்ள அனுமதி அளித்துள்ள நிலையில் 2,450 ஏக்கர் அளவுக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக மணல் குவாரி முறைகேடு விவகாரம்: ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு அமலாக்கத்துறை கடிதம்