சென்னை: மணல் குவாரி முறைகேடு வழக்கில். அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 25ந்தேதி) அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராகின்றனர்.
தமிழ்நாட்டில் மணல் குவாரிகளை ஒப்பந்தம் விடுத்து, ஆட்சியாளர்களும், ஒப்பந்ததாரர்களும், அதிகாரிகளும் கொள்ளை லாபம் அடிக்கின்றனர். அரசின் விதிகளை மீறி மணல் அள்ளப்படுகிறது. இதனால் கிடைக்கும் வருமானம் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் நடந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறை பல மாவட்டங்களில் ரெய்டு நடத்தியதுடன், மணல்குவாரி ஒப்பந்ததாரர்களின் அலுவலகம் வீடு மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் ரெய்டு நடத்திய ஆவணங்களை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியது.
அமலாக்கத்துறையின் சம்மன் தமிழ்நாடு அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. இந்த சம்மனை ரத்து செய்ய கோரி தமிழக அரசின் பொதுத்துறை, நீர்வளத்துறை செயலர்கள், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த தடை உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேலா எம் திரிவேதி மற்றும் பங்கஜ் மித்தல் அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர்கள் எப்படி ரிட் மனு தாக்கல் செய்ய முடியும், அவர்கள் விசாரணை அமைப்புகளுக்கு ஒத்துழைக்க வேண்டாமா என்று கேள்வி எழுப்பியது.
இதற்கு தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட பதிலைத் தொடர்ந்து, அமலாக்கத் துறைக்கு எதிராக எப்படி மாவட்ட ஆட்சியர்கள் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் என்றும், அரசியலமைப்பின் 256வது பிரிவு, ஒவ்வொரு மாநிலமும் நாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களுக்கு இணங்க வேண்டும் என்றும், ஏதேனும் குற்றங்கள் உள்ளதா என்பதைக் கண்டறிய அமலாக்கத்துறை உடன் ஒத்துழைப்பதால் என்ன பாரபட்சம் ஏற்படும் என்றும் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியது.
நீதிமன்றத்தின் கேள்விக்கு தமிழக அரசு தரப்பில் பதில் அளித்த மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அமித் ஆனந்த் திவாரி ஆகியோர், முன்னறிவிப்பு குற்றங்கள் இருந்தால் மட்டுமே அமலாக்கத்துறை விசாரிக்க முடியும் என்றும், அனைத்து வழக்குகளையும் மத்திய ஏஜென்சி மூலம் விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் விரும்பினால், நீதிமன்றம் பொது உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
மேலும், “மணல் விற்பனை உள்ளிட்ட விவரங்களை அமலாக்கத் துறை கேட்டதால் தமிழ்நாடு அரசு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் ஒரு பகுதி மாவட்ட ஆட்சியாளர்கள் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்.
சட்டவிரோத மணல் விற்பனையை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லாத போது எப்படி சம்மன் அனுப்ப முடியும்? சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யாத போது அமலாக்கத் துறை பண மோசடி தடுப்பு சட்டத்தின் எந்த பிரிவில் தகவல் கோர முடியும்? என்றும் தெரிவித்தனர்.
ஆனால், அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்,. அமலாக்கத்துறை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவர்களது கடமை என்று கூறியதுடன், இந்த விஷயத்தில் மிழ்நாடு அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது சரியல்ல என்று கூறிய உச்சநீதிமன்றம் மாவட்ட ஆட்சியர்கள் தான் இதுகுறித்து மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கடுமையாக சாடியது.
இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாட்டில், தேர்தல் பணிகள் இருப்பதால் மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் அளிக்க வேண்டும், அவர்களுக்கு பதிலானாக ஆட்சியர்களின் பிரதிநிதிகள் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.