டில்லி,
தமிழக மணல் குவாரிகளை மூட சென்னை உயர் நீதிமன்ற மதுரைகிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் மணல் குவாரிகள் செயல்பட தடைவிதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கில், மதுரை ஐகோர்ட்டு கிளை தமிழகத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்தில் மூட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளை கடந்த ஆண்டு நவம்பர் 29-ம் தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
சுற்றுச்சூழல் நலன் கருதியும், வருங்கால சந்ததியினரின் நலன் கருதியும் தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாத காலத்திற்குள் மூட வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், புதிய மணல் குவாரிகள் அமைக்கக்கூடாது என்றும் தமிழகத்திற்கு தேவையான மணலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யலாம் என்றும், அதற்கு தமிழக அரசு முறையான வழிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவுக்கு தடை விதிக்க கோரி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் மேல்முறைடு செய்யப்பட்டது. இந்த வழக்கில்,மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவுக்க தடை விதிக்க முடியாது என்றும், மீண்டும் கடந்த ஜனவரி 19ந்தேதி ஐகோர்ட்டு தெளிவுபடுத்தியிருந்தது.
இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக மணல் கிடைக்காமல் மாநிலம் முழுவதும் கட்டுமானப் பணிகள் பெரும் பாதிப்படைந்தது.
இதன் காரணமாக, தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், மதுரை ஐகோர்ட்டு கிளையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாக அறிவித்து உள்ளது.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும், மணல் குவாரிகள் மீண்டும் செயல்படும் நிலை உருவாகி உள்ளது.