குளச்சல்
குளச்சல் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கருவறையின் ஓட்டுக் கூறை முழுவதும் சேதம் அடைந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காட்டில் பிரபலமான பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. அம்மன் இங்கு புற்று வடிவில் உள்ளார். கருவறைக்கு மேல் முழுக்க மரத்தடிகளுடன் ஓடு வேய்ந்த மேற்கூரை உள்ளது. சுமார் 15 அடி உயரத்திற்கு மேல் மேற்கூரையைத் தொட்ட வண்ணம் புற்று பகுதியில் அம்மன் தலை பகுதி உள்ளது. கோயிலில் கணபதி, நாகர், பைரவர் உள்ளிட்டோருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன.
கேரள மாநில பக்தர்கள் இருமுடி கட்டி இக்கோயிலில் வழிபாடு நடத்த வருவது வழக்கம். இக்கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. முன்பு வழக்கமாகக் காலை 5 முதல் 10 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும். இப்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாகப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை.
ஆயினும் தினசரி பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு நடை சாத்தப்படும். அவ்வகையில் நேற்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. காலை 6.45 மணிக்குத் தீபாராதனை முடிந்து பூசாரிகள் வெளியே வந்தனர். அப்போது வெளியே சாலையில் நின்று பக்தர் ஒருவர் சாமி தரிசனம் செய்த போது கோயில் கருவறை மேற்கூரையில் குபுகுபுவென்று கரும் புகை வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார்.
மிகச் சிறிய நேரத்தில் மேற்கூரையில் தீ மேலும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. ஓடுகள் சரிந்து விழுந்தன. பகவதி அம்மன் சொரூபத்தில் அலங்காரத்திற்குப் போடப்பட்டிருந்த பட்டுகள் கருகி சாம்பலாகின. கோயில் கருவறை முழுவதும் புகைமூட்டத்துடன் காணப்பட்டு உள்ளே இருந்த பொருட்களும் எரிந்தன.
குளச்சல் தீயணைப்புத் துறையினர் வந்து ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். பிறகு சன்னதி பகுதியைக் குளிர்விக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் மரத்தினால் ஆன மேற்கூரை ஒரு பகுதி முற்றிலும் எரிந்து சாம்பலானது. கருவறை பகுதியில் அம்மனுக்குச் சார்த்தப்படும் பட்டுகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது.
கோவில் கருவறையில் இருந்த அம்மனின் வெள்ளியிலான சிலையும் வெப்பத்தால் கருகியது. தீவிபத்து குறித்த தகவல் அறிந்து சுற்றுவட்டாரப் பகுதி பக்தர்கள் திரண்டு கருவறையில் இருந்த எரியாத பட்டு துணிகள், தீ பிடிக்காத பொருட்களைச் சேகரித்து வெளியே கொண்டு வந்தனர். மேலும் கோயில் கருவறை பகுதியைச் சுத்தப்படுத்தினர். தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள். விஜய்வசந்த், விஜயகுமார் உள்ளிட்டோர் வந்து பார்வையிட்டனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.