சென்னை: சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி, அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி பாஜக முற்றுகை போராட்டம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் முன் இந்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2ம் தேதி சென்னையில் தமுஎகச சார்பில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய போது சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் . சிலவற்றை ஒழிக்க வேண்டும், எதிர்க்க முடியாது என்று கூறியிருந்தார். மேலும்,  சனாதானத்தை   ‘டெங்கு, மலேரியா மற்றும் கரோனாவை போல் சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டியது’ எனக் கூறி இருந்தார். இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும், இந்துக்களின் புனிதமான காவி வேஷ்டியுடன் கலந்துகொண்டிருந்தார். இதுவும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. சேகர்பாபு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில்,. உதயநிதியின் பேச்சு நாடு முழுவதிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் தானாகவே வழக்கு பதிவு செய்ய வேண்டும் என முன்னாள் நீதிபதிகள் உள்பட பலர் கடிதம் எழுதி வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி மற்றும் அவரது பேச்சினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பதவி விலக வேண்டும் என பாஜக கெடு விதித்திருந்தது. இதனை அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர்பாபு ஆகியோர் பொருட்படுத்தாததுடன், தாங்கள் கூறிய கருத்தினை மாற்றிக் கொள்ள போவதில்லை எனவும் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு ஆகிய இருவரும் பதவி விலக வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் வரும் 11ம் தேதி முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலை 3 மணிக்கு சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தின் முன் இந்த போராட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.