சென்னை
தமிழக அரசு 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சனாதன தர்மத்துக்கு ஆதரவாகக் கருத்துக்கள் இடப்பட்டுள்ளன,
தமிழக அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் சனாதன தர்மத்திற்கு எதிராகப் பேசியது நாடு முழுவதும் விவாதத்தை உண்டாக்கி உள்ளது. அவர் சனாதனத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டுப் பேசி, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றார். அவரை இந்து அமைப்பினரும், பாஜகவினரும் தொடர்ந்து விமர்சனம் செய்தவண்ணம் உள்ளனர்.
அவர்களுக்குத் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் உதயநிதி ஸ்டாலின், தனது பேச்சை நியாயப்படுத்துவதுடன், சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலையில்லை என்றார். ஒரு புறம் இந்த விவாதம் இருக்கத் தமிழக அரசின் பாடப்புத்தகத்தில் இந்து சமயம் மற்றும் சனாதன தர்மத்திற்கு ஆதரவாகக் கருத்துகள் இடம்பெற்றிருக்கின்றன.
தமிழக அரசின் பன்னிரண்டாம் வகுப்புக்கான (பிளஸ் டூ) அறவியலும் இந்தியப் பண்பாடும் என்ற பாடப் புத்தகத்தின் பக்கம் 58-ல், “இந்து அல்லது ஹிந்து என்ற சொல்லை ஹிம+து எனப் பிரிக்கலாம். ஹிம்-இம்சையில், து-துக்கிப்பவன் எனப் பொருள்படும்.
ஓர் உயிர் எந்த காரணத்திலாவது வருந்துவதாகவே இருந்தால், அத்துயரத்தை தனக்கேற்பட்ட துயரமாகக் கருதி, அகற்ற முன் வருபவனே இந்து ஆவான். அப்பண்புமிக்க மக்களைக் கொண்ட சமயமே இந்து சமயமாகும்.
இந்து சமயம், சனாதன தருமம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. சனாதன தருமம் என்றால் அழிவில்லாத நிலையான அறம் எனப்படும்,” என்ற கருத்து இடம் பெற்றுள்ளது.
இந்து புகைப்படங்களை மோடியின் ஆதரவாளர் ஒருவர் சமூக வலைத்தளப் பதிவில்,
’12 ஆம் வகுப்புக்கான தமிழ்நாடு மாநில அரசு புத்தகத்திலிருந்து ஒரு சான்று இதோ. சனாதன தர்மம் இந்து மதம் என்றும் அழைக்கப்படுகிறது. எனவே, தி.மு.க.வினர் இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறுவது தெளிவாகத் தெரிகிறது’
எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் தொடர்ந்து பலரும் பின்னூட்டங்களை இட்டு வருகின்றனர்.