சென்னை:  சாம்சங் ஆலை தொழிலாளர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டக்காரர்கள் தங்கியிருந்த பந்தல் நள்ளிரவில் காவல்துறையினரால் அகற்றப் பட்ட நிலையில், போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் சங்க நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை எற்படுத்தி உள்ளது. காவல்துறையினரின் அடாவடிக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக, சென்னை மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வரும் 21ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இதனால், தொழிற்சாலைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது இது திமுக அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா் சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவன தொழிலாளா்கள் கடந்த ஒரு மாதமாக  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுடன் தொழிலாளர் நலத்துறையினர்  நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில்,  தமிழ்நாடு அரசு சார்பில்,   அமைச்சா்கள் டி.ஆா்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோா் அடங்கிய குழுவை முதல்வா் மு.க.ஸ்டாலின் அமைத்தாா். இந்தக் குழுவினா் சாம்சங் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில், தொழிற்சங்கம் அமைப்பதைத் தவிர, மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆனால், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று திமுக கூட்டணி கட்சியான,  சிஐடியு தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.  தொடர்ந்து தங்களதுமு கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் ஆலை தொழிலாளா்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவித்தது. இதற்கு  திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  தொழிலாளர்களை இன்று நேரில் சந்தித்து ஆதரவு காங்கிரஸ் மாநில தலைவர்  செல்வப்பெருந்தகை,  விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், வேல்முருகன் உள்ளிட்டோர்  செல்ல இருப்பதாக அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்த பந்தலை காவல்துறையினர் அடித்து உடைத்து அகற்றியதுடன், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிர்வாகிகளையும் கைது செய்தனர். மேலும், நேற்று  நள்ளிரவில் சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகளின் வீடுகளுக்குச் சென்ற காவல்துறையினர்  பலரை  கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, இன்று காலை சாலையில் கூடிய தொழிலாளர்கள் பேரணியாகச் சென்ற நிலையில், காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, கலைந்து செல்வதற்கு கெடு விதித்துள்ளனர். இது சாம்சங் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காவல்துறையினரின் அடாவடி நடவடிக்கைக்கு   கண்டனம் தெரிவித்துள்ள மதுரை எம்பி சு.வெங்கடேசன், “தொழிற்சங்க உரிமைகேட்டு ஜனநாயக வழியில் போராடும் தொழிலாளர்கள் மீது மூர்க்கத்தனமாக காவல்துறை நடந்து கொள்வது கடும் கண்டனத்திற்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.

https://x.com/i/status/1843851581319737816