புபனேஷ்வர்: சாலையோரத்தில் தனது அண்ணனுடன் சேர்ந்து சமோசா வியாபாரம் செய்த ஒரு ஒடிசா இளைஞர், சிஏ தேர்வில் தேர்ச்சிபெற்று சாதனை படைத்துள்ளார். அவரின் தற்போதைய வயது 27.
மேற்கு ஒடிசாவின் ஜர்சுகுடா பகுதியை சேர்ந்த சஷிகாந்த் ஷர்மா என்பவர் வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தந்தை பல இடங்களில் பூஜைகள்செய்து சொற்ப வருமானமே ஈட்டியதால், இவரின் அண்ணன் சமோசா உள்ளிட்ட தின்பண்டஙகளை தயார்செய்து விற்பனை செய்துவந்தார்.
சஷிகாந்தும் தனது அண்ணனுக்கு உதவியாக இருக்க வேண்டிய சூழல். கடந்த 2009ம் ஆண்டு தனது பள்ளிப் படிப்பை முடித்த இவர், அதன்பிறகு 5 ஆண்டுகள் கழித்து தனது வணிகவியல் பட்டப் படிப்பை முடித்தார். ஒரு ஆசிரியரின் அறிவுரைக்கேற்ப சிஏ படிப்பை மேற்கொள்ளத் தொடங்கினார்.
இந்தியாவின் தொழில்முறையிலான தேர்வுகளில் மிகவும் கடினமான ஒன்றான சிஏ தேர்வை, முழுமையான டியூஷன் செல்வதற்குக்கூட வசதியில்லாமல் தொடர்ந்து கடும் முயற்சி செய்து படித்தார். தனது முயற்சியில் மொத்தம் 5 முறை தோல்வியடைந்தார்.
தற்போது தனது 6வது முயற்சியில், அத்தேர்வின் கடினமான 8 பேப்பர்களையும் தேறி சாதனை படைத்துள்ளார். தன் குடும்பத்தில் தன்னளவிற்கு படித்தவர்கள் வேறு யாருமில்லை என்று அவர் கூறுகிறார்.