டில்லி
தேசிய சேமிப்பு பத்திரங்கள்,சிறுசேமிப்பு, கிசான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட அனைத்து சேமிப்புகளுக்கும் வட்டி விகிதத்தில் மாறுதல் இல்லை என அரசு அறிவித்துள்ளது.
வங்கிகள் தங்களிடம் உள்ள சேமிப்புகளுக்கும் முதலீடுகளுக்கும் வட்டி விகிதத்தை மாற்றி உள்ளது. அதை ஒட்டி அரசின் மற்ற சேமிப்புகளுக்கான வட்டி விகிதங்களும் மாற்றி அமைக்கப்படும் என பரவலாகக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அரசின் பரிந்துரையை ஒட்டி மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “அரசு எடுத்துள்ள முடிவின் படி இனி அனைத்து சேமிப்புகளுக்கும் வட்டி விகிதம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறிவிக்கப்படும். அதன்படி வரும் நிதி ஆண்டின் முதல் மூன்று மாதங்களான ஏப்ரல் – ஜூலை 2018க்கான காலாண்டில் சிறுசேமிப்புக்கான வட்டி விகிதங்கள் 4% ஆக இருக்கும். பிராவிடண்ட் பண்ட் மற்றும் தேசிய சேமிப்பு பத்திரங்களின் வட்டி விகிதங்கள் 7.6 % ஆகவும் பெண் குழந்தைகள் சேமிப்பு திட்டத்துக்கு 8.1% ஆகவும் இருக்கும்.
மேலும் அனைத்து சேமிப்பாளருக்கும் ஆதார் அட்டை இணைக்க மேலும் அவகாசம் அளிக்கப்பட உள்ளது. புதிய கணக்கு தொடங்குவோருக்கு ஆதார் அட்டை அவசியமாக்கப்பட்டுள்ளது. இது புதியதாக சேமிப்பு பத்திரங்கள் வாங்குவோருக்கும் அவசியமாக்கப்பட்டுள்ளது: என தெரிவிக்கப்பட்டுள்ளது.