கொழும்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான  சம்மந்தன் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரன்  மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானக் கடிதத்தை ஆளுநரிடமிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார். இதன்மூலம்  முதல்வரின் பதவிக்கு இருந்துவந்த நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளது.

வடக்கு மாகாண அமைச்சர்களான டெனீஸ்வரன், சத்தியலிங்கம் ஆகியோர் மீது ஊழல், முறைகேடுக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முதல்வர் ஒரு விசாரணைக் குழு அமைத்தார்.   ஆனால் அந்த விசாரணைக் குழுவில் சாட்சியம் அளிக்கவேண்டிய  அந்தந்த துறை சார்ந்த பணியாளர்கள், விசாரணை நடந்தபோது ஆஜராகவில்லை.  சம்பந்தப்பட்ட இரு அமைச்சர்களும் அதே துறைகளில் தொடர்ந்து நீடிப்பதே  இதற்கு காரணம் என்று விக்கினேசுவரனிடம் கூறப்பட்டது.   எனவே  விசாரணை முடியும்வரை, அமைச்சர்கள் இருவரும் ஒரு மாதம் பொறுப்பிலிருந்து விலகிநிற்கவேண்டும் என விக்கினேசுவரன் கேட்டுக்கொண்டார்.    அதற்கு, அமைச்சர்கள் சார்ந்த தமிழரசுக் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.

விக்கினேசுவரன் மீது ஏற்கனவே பல விஷயங்களில்  அதிருப்தியில் இருக்கும் தமிழரசுக் கட்சியானது, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதில் இறங்கியது.    வட இலங்கை மாகாண சபையில் ஆளும் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மொத்த 30 உறுப்பினர்களில் தமிழரசுக் கட்சியின் சார்பில் 15 உறுப்பினர்கள் இணைந்து, ஆளுநரிடம் நம்பிக்கையில்லாத் தீர்மானக் கடிதம் அளித்தனர்.

ஆனால் கூட்டணியில் உள்ள டெலோ, ப்ளாட், ஈபிஆர்.எல்.எஃப். கட்சிகளும், தமிழ் மக்கள் பேரவை எனும் சிவில் அமைப்பும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. மக்கள்மத்தியில் முதலமைச்சர் விக்கினேசுவரனுக்கு ஆதரவு பெருகியதை அடுத்து, எதிர்ப்பு தெரிவித்த தமிழரசுக் கட்சித் தரப்பு பின்வாங்கியது.

இதையடுத்து அமைச்சர்கள் டெனீஸ்வரன், சத்தியலிங்கம் இருவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று விக்கினேசுவரனுக்கு சம்மந்தன் உறுதியளித்தார்.   அதை ஏற்றுக்கொண்ட விக்கினேசுவரன், இரு அமைச்சர்களையும் விசாரணையின்போது விலகியிருக்குமாறு தான் வற்புறுத்தப்போவதில்லை என்று சம்மந்தனுக்கு உறுதியளித்தார்.   அதனால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப் போவதில்லை எனவும் ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தை திரும்பப் பெறப் போவதாகவும் விக்கினேசுவரனுக்கு சம்மந்தன் உறுதி அளித்துள்ளார்.   பிரச்னை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.