திருச்சி:

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள பிரபலமான சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மசினி என்ற கோவில் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.

இன்று வெள்ளிக்கிழமை மற்றும் கோடை விடுமுறை என்பதால், கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில், கோவிலில் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த கோவில் யானையான மசினிக்கு திடீரென மதம் பிடித்தது.

இதன் காரணமாக யானை பக்தர்களை விரட்டியது.   பக்தர்கள் அலறியடித்து கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்களை  மசினி யானை விரட்டியதில் 8 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

யானையை கட்டுப்படுத்த பாகன் கஜேந்திரன் கடுமையாக முயற்சி செய்தார். ஆனால், அவருக்கு கட்டுப்படாத யானை, பாகனையும் கீழே தள்ளி மிதித்து கொன்றது.

இதனால் அங்கு பதற்றம் நீடித்தது. அதைத்தொடந்து பக்தர்கள் வெளி யேற்றப்பட்டு, யானையை  கோவிலுக்குள் வைத்து கோவில் நடை சாத்தப்பட்டது. யானை அடக்க மருத்துவர்கள் மற்றும் வேறு பாகன்கள்  வரவழைக்கப்பட்டனர். போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், யானையை  மற்றொரு பாகன் தற்போது கட்டுப்படுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மசினி யானையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

கோவிலினுள் பாகன் இறந்ததால் கோவில் நடை சாத்தப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அதன்பிறகு சில பூஜைகள் நடைபெற்ற பின் பக்தர்களுக்காக நடை திறக்கப்படும்.

இதன் காரணமாக மிரட்சியுடன் காணப்பட்ட பக்தர்கள் தற்போது நிம்மதி அடைந்து உள்ளனர்.

மசினி  யானையின் வெறியாட்டம் (வீடியோ)