சென்னை:

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில், கொரோனா பாதிக்கப்பட்ட நபர் வசிக்கும் பகுதி கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு, அங்கிருந்து யாரும் வேளியேறாதவாறும், உள்ளே புகாதவாரும் தனிமைப்படுத்தப்படுகிறது.


இதுபோன்ற கட்டுப்பாட்டு பகுதிகள் இதுவரை சென்னையிலேயே அதிகமாக இருந்து வந்த நிலையில், தற்போது சென்னையை விட சேலம் மாவட்டத்தில் அதிகமான பகுதிகள் கட்டுப் படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதன் காரணமாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் சேலம் முதலிடம் பிடித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அந்தந்த நகராட்சி, மாநகராட்சி நிர்வாகத்தி னால் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் பட்டிலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம்  1089 கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. இந்த பட்டியலில் கட்டுப்பாடுப்பகுதிகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் சேலம் முதலிடம் பிடித்துள்ளது. அதிகபட்சமாக சேலத்தில் 184 இடங்களும், சென்னையில் 158 இடங்களும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.

திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா 84 பகுதிகளும், முழு ஊரடங்கு அமலில் உள்ள மதுரையில் 75 தெருக்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3ஆம் தேதி நிலவரப்படி நீலகிரி, நாமக்கல், தருமபுரி, வேலூர், பெரம்பலூர், கரூர், மற்றும் அரியலூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் புதிய நோய்த்தொற்று இல்லாததால் கட்டுப்பாடு நீக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக அவை உருவெடுத்துள்ளன.