சேலம்

சேலம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் அருகே உள கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்

கடந்த 16 நாட்களாக சேலம் மாவட்டம் மேட்டூரில் கொளத்தூர் அருகே உள்ள புது வேலமங்கலம், வெள்ள கரட்டூர் கிராமங்களில் சிறுத்தை ஒன்று உலா வந்து அங்குள்ள கோழிகளையும் ஆடுகளையும் பகலிலேயே வேட்டையாடி வருகிறது. சிறுத்தையை மேட்டூர் வனச்சரகர் சிவானந்தம் தலைமையிலான வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க முயன்று வருகின்றனர்.  ஆனால் வனத்துறையினரின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

நேற்று இரவு கணேசன் என்பவருக்கு சொந்தமான ஆட்டுப்பட்டியில் புகுந்த சிறுத்தை இரண்டு ஆடுகளை அடித்து கொன்றது. அப்பகுதி விவசாயிகளுக்கு இது கடும் அச்சத்தை உண்டாக்கி உள்ளது.  வனத்துறை சோதனைச்சாவடி அருகே ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சோதனைச் சாவடியில் வனத்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்

வனத்துறையினரை கண்டித்தும் வனத்துறையினரை கிராமத்தில் இருந்து வெளியேறக் கூறியும் இன்று கொளத்தூரில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடி அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.