சென்னை: கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட சென்னை சேலம் இடையேயான சிறிய ரக விமான சேவை நாளை முதல் தினசரி சேவையாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் முதல் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த மே மாதம் 25ந்தேதி முதல், உள்நாட்டு விமான சேவையை தொடங்க அரசு அனுமதி அளித்தது. அதன்படி சிறிய ரக விமானங்கள், சமூக இடைவெளியுடன், பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை சேலம் இடையே விமான சேவையும் வாரம் இருமுறை மட்டும் இயக்கப்பட்டு வந்தது. தற்போது, ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளதால், நாளை முதல் (அக்டோபர் 1ந்தேதி) சேலம் – சென்னை பயணிகள் விமான சேவை தினசரி இயக்கப்படும் என ட்ரூ ஜெட் நிறுவன மேலாளர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.