சேலம்: சிறை கைதிகளுக்கு வந்த உணவு பொருளை வெளியில் விற்று கல்லா கட்டிய பெண் சிறை கண்காணிப்பாளர் இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இவர் 23 மூட்டை களில் உணவு பொருட்களை வெளியில் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் சேலம் அருகே ஆத்தூரில் அரங்கேறி உள்ளது.
ஊழல்களை தடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளே ஊழல்களை செய்து வருவது, வேலியே பயிரை மேய்வதுபோல இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட சிறையில் உள்ள கைதிகளுக்கு தேவையான உணவு சமைக்க, அதற்கு தேவையான மளிகை பொருட்கள், உருளைக்கிழங்கு, காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற பல்வேறு பொருட்கள் போன்றவை டெண்டர் விடுக்கப்பட்டு அதன்மூலம் பெறப்பட்டு வருகின்றன. இந்த பொருட்களை கொண்டு சிறைவாசிகளுக்கு உணவு தயாரித்து வழங்கிய வேண்டிய சிறைத்துறை அதிகாரிகள், அதில் பாதி அளவே சமையலுக்கு பயன்படுத்தி விட்டு, மீதமுள்ள உணவுபொருட்களையும் திருடி வெளியில் விற்பனை செய்து வருகின்றனர்.இதுபோன்ற சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள மாவட்ட சிறைக்கு, கூட்டுறவு பண்டக சாலையில் இருந்து வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை, அங்கிருந்த எடுத்து வெளிச்சந்தையில் கள்ளத்தனமாக விற்பதாக தகவல் கிடைத்து. இதுகுறித்து, சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் மற்றும் சிறை விஜிலென்ஸ் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, வெளி விற்பனைக்காக 23 மூட்டைகளில் வைத்திருந்த அரிசி, பருப்பு, நிலக்கடலை, ஆயில் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு தரமான பொருட்களை மளிகை கடைகளுக்கு கொடுத்து தரம் குறைந்த பொருட்களை அங்கிருந்து சிறைக்கு அனுப்புவதும் தெரியவந்தது.
இதுபற்றி விசாரணை நடத்திய சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத், மாவட்ட சிறை கண்காணிப்பாளர் வைஜெயந்தியை சஸ்பெண்ட் செய்து அதிரடி உத்தர விட்டுள்ளார்.