சேலம்

சேலம் மாவட்டத்தில் பள்ளிகள் திறந்த உடன் ஒரு மாணவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒரு ஆசிரியையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் சுமார் 10 மாதங்களாகத் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.   தற்போது கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாக குறைந்து வருகிறது.  மேலும் ஏப்ரல் மே மாதங்களில் பொதுத் தேர்வு நடைபெற உள்ளதால் தமிழக அரசு 10 மற்றும் 12 ஆ,ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மட்டும் கடந்த 19 ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறந்துள்ளது.  தமிழக அரசு இதற்கு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இந்நிலையில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் அருகே ஒரு 10 ஆம் வகுப்பு மாணவி வாழப்பாடி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு உடல் நிலை சரி இல்லாததால் இவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு நேற்று கொரோனா உறுதி ஆனது.  இதையொட்டி மாணவி ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த மாணவியுடன் விடுதியில் தங்கி இருந்த 36 மாணவிகள், விடுதியில் இருந்த 25 மாணவிகள், விடுதி வார்டன் மற்றும் ஆசிரியை உள்ளிட்ட 72 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.  இந்த மாணவி இருந்த வகுப்பறை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு 10 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.

சேலம் நகரில் கோட்டை பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது.  இங்கு ஒரு மூத்த ஆசிரியை பணி புரிந்து வருகிறார். சுமார் 50 வயதாகும் இவருக்குப் பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இரு நாட்களில் அடுத்தடுத்து மாணவி மற்றும் ஆசிரியை ஒரே மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.