சென்னை: தமிழ்நாடு முழுவதுதும் குட்கா உள்பட போதை பொருள் விற்பனை செய்தது தொடர்பாக கடந்த 11 மாதத்தில் 21,761 வழக்குகள் பதிவி செய்யப்பட்டு உள்ளது என்றும் 20ஆயிரம் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளதுடன், ரூ.17.02 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாகவும் டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் போதை பொருட்கள் கடத்தல், கஞ்சா, குட்கா உள்பட போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதை நீதி மன்றமும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
இந்த நிலையில், தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் அருகேயுள்ள கடைகளில் போதைப் பாக்குகள் விற்பனை தொடா்பாக சோதனை நடத்துவதற்கு உணவு பாதுகாப்புத் துறை, மருந்து நிா்வாகத் துறை, காவல்துறை ஆகிய துறைகளின் அதிகாரிகள் அடங்கிய 391 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கல்வி நிறுவனங்கள் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்கு, புகையிலைப் பொருள்களை விற்றால், சம்பந்தப்பட்ட நபா் மீது கடுமையான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்தாண்டு நவ. 19 முதல் நிகழாண்டு செப். 14 வரை 208.85 டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது தொடா்பாக 21,761 வழக்குகள் பதியப்பட்டு, ரூ.17.02 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
போதைப் பொருள் விற்ற 10,155 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல, காவல் துறையும், உணவு பாதுகாப்புத் துறையும் இணைந்து மாநிலம் முழுவதும் சுமாா் 3 லட்சம் கடைகளில் கூட்டுச் சோதனை நடத்தியது. இதில் ரூ.10.9 கோடி மதிப்புள்ள 132.89 டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், போதைப் பொருள் விற்றக 9,924 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.
போதை பொருள் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்:
சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் அண்மையில் பெரிய அளவில் போதைப் பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட போதைப் பாக்கு, புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் 10581 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இல்லையெனில், 94981 10581 என்ற வாட்ஸ் அப் எண், தகவல் தெரிவிக்கலாம். தகவலளிப்பவா்கள் குறித்த விவரம் ரகசியமாக வைக்கப்படும். மேலும், பொதுமக்கள் அளிக்கும் தகவலின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.