டி.வி.எஸ். சோமு பக்கம்:
“சைத்தான்” படம் பார்த்தேன். (எப்போ, எங்கே என்றெல்லாம் கேட்கட்கூடாது!)
tvs-2
படம் வெளியாகி ஐந்து நாட்களாகிவிட்டன. செய்திகளை முந்தித்தரும் இணைய இதழ்கள், பேஸ்புக் பெரியவர்கள், டிவிட்டர் தில்லாலங்கடிகள், வாட்ஸ் அப் வம்பர்கள் என்று பலரும் விமர்சனம் எழுதித் தள்ளிவிட்டார்கள்.
ஆகவே நான் விமர்சனம் எழுதப்போவதில்லை.
படம் பார்த்தவுடன் என் மனதில் எழுந்த சில கேள்விகளை கட்டுரையாக்கியிருக்கிறேன்.
வழக்கமான காமெடி காதல், நம்பமுடியாத மசாலா கதையாக இல்லாமல், வித்தியாசமான கதைக் களத்தை தேர்ந்தெடுக்கும் விஜய் ஆண்டனிக்கு பாராட்டுக்கள்.
திடுமென ஆண்டனியின் மண்டைக்குள் ஒரு குரல் கட்டளை இடுகிறது. அதன் சொற்படி கேட்டு, நடக்க ஆரம்பிக்க.. அதனால் ஏற்படும் விபரீதங்கள்… இதுதான் கதை.
ஆனால் திரைக்கதையில் பல ஓட்டைகள்.
பிரதமர் மோடியின் கரன்சி இல்லா வர்த்தகத்தை யார் கடைபிடிக்கிறார்களோ இல்லையோ, இந்தப்பட நாயகர் விஜய் ஆண்டனி, அப்படியே ஃபாலோ செய்கிறார்.
saithan2
வீட்டிலிருந்து திடுமென ஓடுபவர், (அவர் கேரக்டர் அப்படி) எழும்பூர் ரயில் நிலையம் வந்து தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ஏறி விடுகிறார். டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் கேட்கிறார். இவர் எப்படி சமாளித்தார் என்பதைக் காண்பிக்க வில்லை. அதே ரயிலில் தஞ்சாவூர் வந்து சேர்ந்துவிடுகிறார். பரிசோதகரிடம், “மோடி.. கரன்சி..” என்று மந்திரச் சொல் உச்சரித்திருப்பாரோ..?
தஞ்சாவூர் இறங்கிய வேகத்தில் ஆட்டோவில் சுற்றுகிறார். பலரைச் சந்திக்கிறார். எத்தனை நாள் தங்கினாரோ.. பட், கரன்சி இல்லா மெத்தடில் வாழ்கிறார்.
அப்புறம், திடுமென சென்னை மருத்துமனை பெட்டில் கிடக்கிறார்.
மருந்து, மாத்திரை, லெபாரட்டரி என்று அறிவியல் சாயம் பூச முற்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஏதோ மருந்து சாப்பிட்டால் பூர்வ ஜென்ம நினைவு வந்துவிடுகிறது என்பதெல்லாம் என்ன லாஜிக்கோ…
மனோதத்துவ மருத்துவரும்கூட, நோயாளியிடம் பேசிப்பேசி முன் ஜென்ம நினைவுக்குக் கொண்டு வந்துவிடுகிறாராம்!
“அப்பா”வுக்கு இருப்பது போலவே குழந்தைக்கும் கையில் அதே இடத்தில் மச்சம் இருக்கிறதாம்.
saithan111
மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் மனிதரிடமிருந்து கிட்னி, கண் எல்லாத்தையும் உடனே எடுங்க என்கிறார் அறிவியல் வில்லன்!
இப்படி அறிவியல் பெயரில் மூட நம்பிக்கைகளை விதைக்கும் காட்சிகள் நிறைய.
ஆனால், வெளிநாட்டு மருந்து மாஃபியாக்கள், தங்களது மருந்தை மனிதரின் உடலில் செலுத்த நம் நாட்டு மக்களை பயன்படுத்துவதைச் சொல்கிறது படம்.
இந்த படத்தின் மூலம், எழுத்தாளர் சுஜாதா பல ஆண்டுகளுக்கு முன் வார இதழில் எழுதிய “ஆ” என்ற தொடர்.
ஆக, பற்பல வருடங்களுக்கு முன்பே மருந்து மாஃபியா குறித்து எழுதியதற்காக அமரர் சுஜாதாவை பாராட்டலாம்.
இன்னொரு விசயம்…
பிராமண குடும்பத்தைச் சேர்ந்த பெண் கள்ளக்காதலில் மூழ்கிவிடுவதாக காண்பிக்கிறார்கள். கள்ளக்காதல், நல்லக்காதல் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
தேவையில்லாமல் சாதி அடையாளத்தை ஏன் இழுக்கிறார்கள்?
வேறு ஒரு சாதி அடையாளத்துடன் இப்படி ஒரு பெண்ணை திரையில் காண்பிக்க முடியுமா?
இடைவேளை வரை சுவாரஸ்யமாக செல்லும் திரைக்கதை அதன் பிறகு தொங்குகிறது.
ஆனாலும் வித்தியாசமான கதைக்களத்துக்காக பார்க்கலாம்