சைதாப்பேட்டை காரணீசுவரர் கோயில்
காரணீஸ்வர் கோவில் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு சைதாப்பேட்டையில் அமைந்திருக்கும் சிவாலயமாகும். இக்கோவில் திருக்காரணீசுவரம் என்றும் அறியப்பெறுகிறது.
இச்சிவாலயத்தின் மூலவர் காரணீஸ்வரர், தாயார் சொர்ணாம்பிகை. சுற்றுப்பிரகாரத்தில் சௌந்திரஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி சன்னிதியும் உள்ளது.
தல வரலாறு
தமிழகத்தில் உள்ள முக்கிய சிவாலயங்களில் ஒன்றாகவும், 450 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமாக விளங்குவது சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் ஆகும். காமதேனு எனும் தெய்வ பசுவினை தேவேந்திரனிடம் இருந்து பெற்ற வசிஷ்ட முனிவர், தான் பூஜை செய்யும் போது இடையூறு செய்ததாகக் கருதி அதனைக் காட்டுப்பசுவாக மாற்றிவிட்டார்.
இதனை அறிந்த தேவேந்திரன் இந்தப் பகுதியை மழையால் குளிரவைத்து, சோலையாக்கி சிவனை நோக்கி லிங்க பிரதிஷ்டை செய்து காமதேனு பசுவை மீட்டார். இதனால் இப்பகுதி திருக்காரணி என்று அழைக்கப்பட்டது.
இதையடுத்து இப்பகுதியில் கோவில் எழுப்பப்பட்டது. இத்தலத்தின் நாயகர் காரணீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
இங்கு இந்திரன், மால், அயன் முதலிய கடவுளர்களும், சிவசைதனிய முனிவரும், ஆதொண்ட சக்கரவர்த்தியும், குருலிங்க சுவாமி முதலிய சிவத்தொண்டர்களும் வழிபட்டு முக்தி பெற்றுள்ளனர் என்பது வரலாறு.
கோயில் அமைப்பு
இச்சிவாலயம் தென்திசையில் ராஜகோபுரத்தினை கொண்டுள்ளது. இந்த ராஜகோபுரத்தின் நுழைவாயிலில் பத்ரகிரியார், பட்டினத்தார் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இச்சிவாலயத்தின் மூலவரான காரணீஸ்வரர் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகிலேயே சொர்ணாம்பிகை அம்மன் சன்னிதி உள்ளது.
உள் சுற்றுப் பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களும், தட்சிணாமூர்த்தி, திருமால், சண்டேசர், துர்க்கை, பைரவர் சன்னிதிகளும் அமைந்துள்ளன. வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் மூலவருக்கு வலதுபுறம் விநாயகரும், இடது புறம் வள்ளி தெய்வானையுடன் முருகனும் இருக்கிறார்கள்.
அத்துடன் வேதகிரீஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்க திருமேனியும், திரிபுரசுந்தரி என்ற அம்மனும் வெளிச்சுற்றில் தனிச் சன்னிதிகளில் இருக்கின்றார்கள். சனீஸ்வரன், பழனி முருகன், ஆஞ்சநேயர், நவகிரகங்கள், வீரபத்திரன் ஆகியோருக்கு தனிச்சன்னிதிகள் உள்ளன. வீரபத்திரன் சன்னதி கோபுரத்தில் தட்சன் ஆட்டுத் தலையுடன் காட்சியளிக்கின்றார்.
இக்கோவிலில் காமிகா ஆகமத்தின்படி நடைபெறுகின்றன. பிரம்மோற்சவ விழாவின் எட்டாம் நாள் திருஞான சம்மந்தர் ஞானப்பால் அருந்திய நிகழ்ச்சி நடைபெறுகிறது. இக்கோவிலின் திருக்குள நுழைவுவாயிலில் குழந்தையாக இருந்த ஞானசமந்தருக்கு அம்மை பாலூட்டிய காட்சி சிற்பமாக உள்ளது.