திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பெரியார் சிலைக்கு மீண்டும் காவி சாயம் பூசப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
திண்டுக்கல் அருகே ரெட்டியார் சத்திரம் சமத்துவபுரம் பகுதியில் பெரியார் சிலை ஒன்று பல ஆண்டுகளாக உள்ளது. இந்த பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயத்தை பூசி வீட்டு தப்பியோடிவிட்டனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒட்டன்சத்திரம் போலீசார், இரவில் மின் விளக்குகளை அணைத்துவிட்டு பெரியார் சிலைக்கு புதிய வர்ணம் பூசினர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது குற்றவாளிகளை உடனடியாக கைது செய்துவிடுவோம் என போலீசார் உறுதியளித்தை தொடர்ந்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தி.மு.கவினர், அந்த காவி சாயங்களை அகற்றி தந்தை பெரியார் சிலையை தூய்மைப்படுத்தினர். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தி.மு.க பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில் குமார் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காவி சாயம் பூசப்பட்ட பெரியார் சிலையை பார்வையிட்ட பழனி திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
தமிழகத்தில் தந்தை பெரியார் அவர்களின் உருவச் சிலைகள் தகர்க்கப்படுவதும், தாக்கப்படுவதும், சிதைக்கப்படுவதும், இழிவு செய்யப்படுவதும் தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது. நாடே போற்றும் தலைவரின் சிலையைச் சேதப்படுத்தி அதில் ஆனந்தம் அடையும் அற்ப நடவடிக்கையும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் தொடர்கதையாகியுள்ளது.
சமீபத்தில்கூட கோவை சுந்தராபுரம் பகுதியில், திராவிடர் கழகம் நிறுவிய தந்தை பெரியார் சிலை மீது காவி சாயத்தைப் சில சமூக விரோத சக்திகள் இழிவு செய்தன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து திருச்சியில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி, செருப்பு மாலை அணிவித்து அவமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரியார் சிலை அவமதிப்புக்கு திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் அழகிரி, பாமக தலைவர் ராமதாஸ், விசிக தலைவர் திருமா உள்பட பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.