ஐதராபாத்: அசாதுதீன் ஓவைசி எம்.பியின் நலனுக்காக 101 ஆடுகள் பலியிட்டு அவரது ஆதரவாளர்கள் வேண்டுதலில் ஈடுபட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவரும், எம்.பி.,யுமான அசாதுதீன் ஓவைசி கட்சி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தலில் உ.பி. உள்பட சில மாநிலங்களில் போட்டியிடுகிறது. உ.பி.யில் 100 பேர் வேட்பாளர்களாக அறிவித்துள்ளார். இவர்களில் 66 பேர் முஸ்லிம்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் களமிறக்கப்பட்டு உள்ளனர். இதனால் உ.பி.யில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.
இதையடுத்து, தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உத்தர பிரதேசத்தின் மீரட் சென்றிருந்தபோது, அவரது கார்மீது மர்ம நபர்கள் துப்பாக்கி யால் சுட்டனர். இதில், அவர் காயமின்றி தப்பினார். இதில் கார் சேதமடைந்தது. வேறொரு காரில் ஏறி ஒவைசி டெல்லி சென்றார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவருக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்குவதாக மத்திய அரசு கூறியது. எனினும், ஓவைசி அதனை ஏற்க மறுத்து விட்டார்.
இந்த நிலையில், ஓவைசி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக, நொய்டாவைச் சேர்ந்த சச்சின், சஹரான்பூரைச் சேர்ந்த ஷூபம் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். அவரின் இந்து விரோத பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவரது வாகனத்தைச் சுட்டதாக கைதான இருவரும் வாக்குமூலம் அளித்தனர். இதுகுறித்து கூறிய ஹாபூரில் உள்ள கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, முக்கிய குற்றவாளியான சச்சின் பண்டிட்தான் தோட்டாக்களை சுட்டார். அவரிடம் இருந்து 9 மி.மீ துப்பாக்கி கைப்பற்றப்பட்டது என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்று பாராளுமன்ற இரு அவைகளிலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், லோக்சபா எம்பி அசாதுதீன் ஒவைசியின் பாதுகாப்புக்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் ஐதராபாத்தில் தொழிலதிபர் ஒருவர் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) 101 ஆடுகளை பலியிட்டார். ஐதராபாத்தில் உள்ள பாக்-இ-ஜஹானாராவில் இந்த பலியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மலக்பேட்டை எம்எல்ஏவும், ஏஐஎம்ஐஎம் தலைவருமான அகமது பலாலா கலந்து கொண்டார்.