ஜெய்ப்பூர்
இந்து மத சன்னியாசினி ஒருவர் ராமர் கோயில் கட்ட இப்போது தான் முடியும் என கூறி உள்ளார்.
சன்னியாசினி ரிதம்பரா என்பவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். தனது பதினாறம் வயதில் துறவறம் மேற்கொண்டவர். பல இந்து அமைப்புக்களிலும் ஆர் எஸ் எஸ் பெண்கள் பிரிவிலும் இவர் ஒரு உறுப்பினர் ஆவார். இவரது ராமாயண கதா காலட்சேபம் இவருக்கு புகழைத் தேடித் தந்தது. வட இந்தியாவிலும் பல வெளிநாடுகளிலும் இவர் இறைவன் கதைகளைச் சொல்லி புகழ் பெற்றவர்.
கடந்த 1992ஆம் ஆண்டு நிகழ்ந்த பாப்ரி மஜித் இடிப்பில் இவரும் கலந்துக் கொண்டவர். இவர் பல இடங்களில் உரையாற்றும் போது இஸ்லாமியர்களை குறி வைத்து தாக்குவது இவர் வழக்கம். சமீபத்தில் ஜெய்ப்பூரில் ஒரு பக்தி நிகழ்வில் கலந்துக்கொண்டார்.
அப்போது பத்திரிகையாளர் கேள்விகளுக்கு அளித்த பதிலில், “ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தயார் நிலையில் உள்ளது. நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும் ஆரம்பிக்கப்படும். மோடியும், யோகியும் ஆட்சி செய்யும் நேரமே ராமர் கோவில் கட்ட உகந்த தருணமாகும். இப்போது இல்லாமல் வேறு எப்போது ராமர் கோவிலை கட்டுவது? நிறைய சன்னியாசிகளும் சாதுக்களும் தற்போது குற்ற வலையில் சிக்குகின்றனர். எல்லா நாணயங்களிலும் செல்லா நாணயங்கள் உண்டு. மக்கள் தான் சரியானவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்” என ரிதம்பரா கூறினார்.