அலகாபாத்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை தொடங்க கும்பமேளாவுக்கு பிறகு சாதுக்கள் கூட உள்ளனர்.
கடந்த 2014 தேர்தல் வாக்குறுதியில் பாஜக அயோத்தியில் ராமர் கோவில் கட்டித் தருவதாக கூறி இருந்தது. அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தும் ராமர் கோவில் கட்டுவது பற்றி அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் இந்து அமைப்பினர் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்து அமைப்புக்களான ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட பல பாஜக ஆதரவு அமைப்புக்களும் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் ராமர் கோவில் கட்டித் தர காங்கிரஸ் முன் வந்தால் வரும் 2019 மக்கள்வை தேர்தலில் ஆதரவு அளிப்போம் என கூறியதாக ஒரு செய்தி பரவியது. ஆனால் அது திரிக்கப்பட்ட செய்தி எனவும் தாங்கள் காங்கிரஸ் கட்சியை எப்போதும் ஆதரித்தத்தும் இல்லை ஆதரிக்கவும் மாட்டோம் எனவும் அலோக் குமார் மறுத்தார்
தற்போது அலகாபாத்தில் கும்பமேளா நடந்து வருகிறது. இதில் பல மடங்களைச் சேர்ந்த சாதுக்கள் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த சாதுக்கள் கூட்டமைப்பான அகில இந்திய அகடா பரிஷத் அமைப்பின் தலைவர் மகந்த் நரேந்திர கிரி, “கும்ப மேளா முடிந்ததும் சாதுக்கள் அனைவரும் அயோத்தியில் கூட உள்ளோம். பாஜக ராமர் கோவில் விவகாரத்தை தேர்தலுக்காக ஒத்தி வைக்கிறது. ஆகவே சாதுக்கள் கூடி கோவில் கட்டுவதை தொடங்க எண்ணி உள்ளோம்.
இதை ஒட்டி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நாகா சாதுக்களும் மடாதிபதிகளும் அயோத்தியில் ஒன்று கூடுகிறோம். நாகா சாதுக்கள் நடை பயணமாக அயோத்தி வருகின்றனர். அதன் பிறகு கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட உள்ளது. விஸ்வ இந்து பரிஷத் ராமர் கோவில் கட்ட தர்ம சன்சத் என்னும் அமைப்பை தொடங்குவதாக கூறி உள்ளது. ஆனால் அதனால் ஏதும் பயன் உள்ளதா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது.“ என தெரிவித்துள்ளார்.