மும்பை:
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சச்சின் டெண்டுல்கர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்க கடந்த 27ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் மருத்துவர்களின் சில அறிவுரைகளுடன் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டில் இருந்து வந்த கொரோனா வைரஸ் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதனால் சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு பிரபலங்களும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மார்ச் 27ம் தேதி இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு சமீபத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்தார்.

சில தினங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட அவர், கடந்த 2ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் மருத்துவர்களின் அறிவுரைகளுடன் முன்னெச்சரிக்கையாக அனுமதி ஆனதாகவும், சில நாட்களில் மீண்டு வருவேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். என தெரிவித்தார். அவர் விரைவில் மீண்டு வர முன்னாள் வீரர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கடைசியாக எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளதால் அவரை மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்தனர். எனினும் அடுத்த சில நாட்களுக்கு அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.