‘’அரியானாவில் சச்சின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு ஆயிரம் போலீசார் பாதுகாப்பு’’
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகக் கலகம் செய்ததால், துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார்.
அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் பா.ஜ.க.ஆட்சி நடத்தும் அரியானா மாநிலத்தில் மானேசார் என்ற இடத்தில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சச்சின் பைலட்டுடன், காங்கிரஸ் மேலிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் என்ற இடத்தில் பேட்டி அளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலாவிடம், ‘’ சச்சினை ஆதரிக்கும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு காங்கிரசின் கதவுகள் மீண்டும் திறக்கப்படுமா?’’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
’’அந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வினர் அளிக்கும் விருந்தை கை விட வேண்டும். அரியானா போலீசாரின் பாதுகாப்பையும் துறந்து விட்டு, எங்களிடம் வந்தால் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவோம்’’ என்று சுர்ஜிவாலா பதில் அளித்தார்.
’’அரியானா மாநிலத்தில் உள்ள குர்கானில் பெண்கள் கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஆனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு ஆயிரம் அரியானா போலீசார் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்’’ என்று ரந்தீப் குற்றம் சாட்டினார்.
– பா.பாரதி.