மும்பை: டெஸ்ட் போட்டியை 4 நாட்களாகக் குறைப்பது என்ற கருத்தை இந்திய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் எதிர்த்துள்ளார்.
சர்வதேச டெஸ்ட் போட்டிகளை 5 நாட்களிலிருந்து 4 நாட்களாக குறைப்பது குறித்து ஐசிசி திட்டமிட்டு வருகிறது. இதற்கு சிலர் ஆதரவு தெரிவிக்க, இந்திய கேப்டன் விராத் கோலி உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சச்சினிடம் இதுகுறித்து கேட்கப்பட, “டெஸ்ட் போட்டி 5 நாட்கள் என்பதில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். டெஸ்ட் போட்டிதான் பேட்ஸ்மென்களின் திறமையை சோதிப்பதற்கான போட்டியாகும். போட்டியின் முதல் நாளில் வேகப்பந்து வீச்சாளர்களும், கடைசி நாளில் சுழற்பந்து வீச்சாளர்களும் ஆதிக்கம் செலுத்துவர்.
ரசிகர்களின் விறுவிறுப்பை அதிகரிக்க டி-20 மாதிரியான போட்டிகள் வந்துவிட்டன. எனவே, டெஸ்ட் போட்டிகளை அப்படியே விட்டுவிடுங்கள். சுத்தமான கிரிக்கெட் ரசிகர்களுக்காக டெஸ்ட் போட்டிகளை விட்டுவிடுங்கள்.
டெஸ்ட் போட்டிக்கான மைதானத்தை தரமானதாக மாற்றினால், அப்போட்டியைக் காண, ரசிகர்கள் தாமாகவே முன்வருவார்கள்” என்றார்.