சபரிமலை விவகாரம் தொடர்பான வழக்குகளை 7 பேர் கொண்ட அமர்வுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்திருப்பது வரவேற்கத்தக்கது என சபரிமலை மேல்சாந்தி கண்டரரு ராஜீவரரு தெரிவித்துள்ளார்.

சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் மீது, உச்சநீதின்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உட்பட 5 பேர் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அப்போது, 5 நீதிபதிகளில் இருவர் பழைய தீர்ப்பு தொடரும் என்றும், மூவர் பெண்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என்றும் கருத்துக்களை தெரிவித்தனர். அத்தோடு மத நம்பிக்கை மற்றும் உரிமைகளுக்கு இடையே இவ்விவகாரம் இருப்பதாக, ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்று கூறி, மறுசீராய்வு வழக்கை 7 அல்லது அதைவிட பெரிய அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது.

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சபரிமலை மேல்சாந்தி கண்டரரு ராஜீவரரு, “உச்சநீதிமன்றம் வழக்கை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றியுள்ளது வரவேற்கக்கூடிய முடிவு. உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவு ஐயப்ப பக்தர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. ஐயப்ப பக்தர்களை ஒரு தனி குழுவாக பார்க்க வேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தின் கவனமான கருத்துக்கள் வரவேற்கக்கூடியவை தான். 7 பேர் கொண்ட அமர்வு நிச்சயமாக ஐயப்ப பக்தர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு அளிக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.