டில்லி

நேருவின் பிறந்த நாளான குழந்தைகள் தினத்தன்று 1957 ஆம் வருடம் நேருவின் உயிரைக் காத்த ஒரு குழந்தையைப் பற்றிப் பார்ப்போம்.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14 குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.   நேருவுக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் இவ்வாறு கொண்டாட்டம் நடைபெறுகிறது.   இந்த வேளையில் ஜவகர்மேல் நேருவின் உயிரைக் காத்து இந்தியாவின் முதல் வீரச்செயல் விருதைப் பெற்றுள்ள சிறுவனைப் பற்றிக் காண்போம்.

கடந்த 1957 ஆம் வருடம் டில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ஜவகர்லால் நேரு கலந்துக் கொண்ட காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது.   அதில் அப்போது 14  வயதான ஹரிஷ் மேத்தா என்னும் சிறுவன் சாரணராக இருந்தார்.  அவர் தந்தை ஒரு சுதந்திர போராட்ட வீரர் ஆவார்.   ஹரிஷ் அப்போது பிரமுகர்கள் இருந்த பந்தல் அருகே இருந்தார்  திடீரென பந்தல்  தீப்பிடித்தது.

சிறுவன் ஹரீஷ் தனது உயிரையும் பொருட்படுத்தாது பந்தலின் உள்ளே புகுந்து நேருவைக் கையைப் பிடித்து பத்திரமாக  அழைத்து வந்தார்.   அதன்பிறகு மீண்டும் பந்தலின் உள்ளே சென்று எரிந்துக் கொண்டிருந்த பந்தல் துணையை கைகளால் பிடித்து அணைத்தார்.  இதனால் அவர் கைகள் பயங்கரமாகப் பொசுங்கியது.   இதையொட்டி 1958 ஆம் வருடம் இந்தியாவின் வீரச்செயல் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக இந்த விருதைப் பெற்ற ஹரிஷுக்கு இந்த தகவலை அவர்  படித்த பள்ளிக்குச் சென்று இந்திரா காந்தி நேரில் தெரிவித்தார்.   அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் வீரச்செயல் புரிந்த குழந்தைகளுக்கு விருது வழங்குவது தொடர்ந்தது.

இந்த விருது வழங்கும் விழாவில்  இந்திரா காந்தி விருது வழங்கும் அறிவிப்பைப் படித்துள்ளார்.  உடன் ஜவகர்லால் நேரு எழுந்து, “இந்த சிறுவனுக்கு அறிமுகம் தேவை இல்லை.  இவருடைய வீரச்செயலுக்கு நானே ஒரு முக்கிய சாட்சி,” எனப் புகழ்ந்துள்ளார்.   அது மட்டுமின்றி 1958 ஆம் வருடக் குடியரசு தின ஊர்வலத்தில் ஹரீஷ் முதலில் வந்துள்ளார்.   அப்போது அனைவரும் அவரை நேருவின் உயிரைக் காத்த குழந்தை என புகழ்ந்துள்ளனர்.

இந்த நிகழ்வை நினைவு கூர்ந்த ஹரிஷுக்கு தற்போது 76 வயதாகிறது.  அவர், “இந்த நிகழ்வுக்கு ஐந்து வருடங்களுக்குப் பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாகப் படிப்பை விட்டு விட்டுப் பணி செய்ய நேரிட்டது.  எனக்கு மட்டுமல்ல விருது பெற்ற பலருக்கும், இது போல நிகழ்ந்துள்ளது.  விருது பெற்ற பலர் சாலைகளில் தேநீர் மற்றும் செய்தித்தாள்களை விற்று வருகின்றனர்.  ஒரு சிலர் ஏழ்மை காரணமாக தங்களது பதக்கத்தையும் விற்றுள்ளனர்’ என கண்ணீருடன் கூறி உள்ளார்.